மாமல்லபுரம் கடற்கரையில் வாலிபர் பிணமாக மீட்பு


மாமல்லபுரம் கடற்கரையில் வாலிபர் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 18 Sept 2021 2:16 PM IST (Updated: 18 Sept 2021 2:16 PM IST)
t-max-icont-min-icon

படிப்புக்கு ஏற்ற சரியான வேலை கிடைக்காததால் வீட்டை விட்டு 10 மாதங்களுக்கு முன்பு வெளியேறிய வாலிபர் மாமல்லபுரம் கடற்கரையில் பிணமாக மீட்கப்பட்டார். இவர் தற்கொலை செய்து கொண்டாரா? என மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடல் மீட்பு

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரையில் வாலிபர் ஒருவரின் உடல் கரை ஒதுங்கி இருப்பதாக மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல் வந்தது. பிறகு மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் போலீசார் மாமல்லபுரம் கடற்கரைக்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றினர். அவரது பேண்ட் பாக்கெட்டில் கிடந்த அடையாள அட்டையை எடுத்து தகவல் சேகரித்தபோது அவர் விழுப்புரம் மாவட்டம் கிடார் கிராமத்தை சேர்ந்த மேகநாதன் என்பரின் மகன் தமிழ்வாணன் (வயது 23) என்பது போலீசாருக்கு தெரிய வந்தது. பிறகு போலீசார் இறந்த தமிழ்வாணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிறகு அவரது பெற்றோரை வரவழைத்து போலீசார் விசாரித்தனர். என்ஜினீயரிங் படித்து முடித்த தமிழ்வாணன் படிப்புக்கு ஏற்ற சரியான வேலை கிடைக்காததால் விரக்தியடைந்த அவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியதாகவும், ஆவடியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்ததாகவும்் அவர்கள் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

தங்களிடம் மகன் தமிழ்வாணன் அதிக தொடர்பில் இல்லை என்றும், 10 மாதமாக சொந்த ஊருக்கு கூட அவன் வரவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தமிழ்வாணன் என்ன காரணத்திற்காக மாமல்லபுரம் வந்தார்? படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காத விரக்தியா? அல்லது காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது முன்விரோதம் காரணமாக யாராவது அவரை மாமல்லபுரம் அழைத்து வந்து அடித்துக்கொலை செய்து மாமல்லபுரம் கடலில் வீசிவிட்டு சென்றனரா? என்ற கோணத்தில் மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story