திண்டுக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுவிற்ற 11 பேர் பணியிடை நீக்கம்
திண்டுக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுவிற்ற 11 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுவிற்ற 11 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
டாஸ்மாக் கடைகளில் ஆய்வு
தமிழகத்தில் செயல்படும் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு விற்பனை செய்பவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட மேலாளர்களுக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உத்தரவிட்டார்.
அதன்படி மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக மதுரை மண்டல முதுநிலை மேலாளர் அருண் சத்யாவுக்கு புகார் வந்தது. இதையடுத்து அவர் தலைமையில் சிறப்பு குழுவினர், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
11 பேர் பணியிடை நீக்கம்
அப்போது பழனி தாலுகா அழகாபுரி, ஆயக்குடி, அய்யம்பாளையம், வயலூர், தாழையூத்து, கொடைக்கானல் ரோடு ஆகிய இடங்களில் செயல்படும் டாஸ்மாக் கடைகளில் ரூ.20 முதல் ரூ.40 வரை கூடுதலாக விலை வைத்து மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடைகளில் வேலை பார்த்த 11 பேரை பணியிடை நீக்கம் செய்து முதுநிலை மேலாளர் உத்தரவிட்டார். இதில் அழகாபுரியில் செயல்படும் டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர்கள் செந்தில்குமார், சதீஷ்குமார், முருகேசன், உதவி விற்பனையாளர்கள் பெல்லார்மின் போஜேராஜ், சத்தியமூர்த்தி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
அதேபோல் ஆயக்குடியில் செயல்படும் டாஸ்மாக் கடையில் விற்பனையாளர் கோபால், கொடைக்கானல் ரோடு டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளர் கார்த்திகைநாதன், உதவி விற்பனையாளர் சிவசுப்பிரமணியன், அய்யம்பாளையம் டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளர் குமாரசாமி, வயலூர் டாஸ்மாக் கடையில் விற்பனையாளர் சுப்பிரமணி, தாழையூத்து டாஸ்மாக் கடையில் விற்பனையாளர் சண்முகம் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
6 பேர் இடமாற்றம்
மேலும் பழனி பாப்பம்பட்டி டாஸ்மாக் கடை விற்பனையாளர் முருகானந்தம், பாலசமுத்திரம் டாஸ்மாக் கடை விற்பனையாளர் தாமோதரன், திண்டுக்கல் பஸ் நிலையத்தில் செயல்படும் டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள் ராஜா, பெரியசாமி, ஆர்.எஸ்.ரோடு டாஸ்மாக் கடை விற்பனையாளர் வெங்கடேசன், என்.ஜி.ஓ. காலனி டாஸ்மாக் கடை விற்பனையாளர் முருகன் ஆகியோரை ரூ.10 கூடுதல் விலை வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்ததற்காக டாஸ்மாக் கடையில் இருந்து மதுபான கிடங்குக்கு இடமாற்றம் செய்து முதுநிலை மேலாளர் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story