கோபுரங்களில் ரசாயன ஊசி மூலம் செடிகள் அகற்றம்


கோபுரங்களில் ரசாயன ஊசி மூலம் செடிகள் அகற்றம்
x
தினத்தந்தி 18 Sept 2021 9:43 PM IST (Updated: 18 Sept 2021 9:43 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் கோபுரங்களில் ரசாயன ஊசி மூலம் செடிகள் அகற்றப்படுகிறது.

வேலூர்

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் கோபுரங்களில் ரசாயன ஊசி மூலம் செடிகள் அகற்றப்படுகிறது.

ஜலகண்டேஸ்வரர் கோவில்

வேலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற இடங்களில் முக்கியமானது வேலூர் கோட்டை. இக்கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர், வெளிமாநில பக்தர்கள் ஏராளமானோர் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். 

இந்தநிலையில் ஜலகண்டேஸ்வரர் கோவில் கோபுரங்கள் மற்றும் சுற்றுச் சுவர்களில் ஏராளமான செடி, கொடிகள் வளர்ந்திருந்தன. 

இதனால் கோவில் கோபுரம் மற்றும் சுற்றுச்சுவர் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வேலூர் கோட்டையில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதால் கோபுரத்தையும் புனரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். 

ரசாயனம் மூலம்

இதையடுத்து கோவில் கோபுரம் புனரமைக்கும் பணி கடந்த 2 வாரமாக நடைபெற்று வருகிறது. கோபுரத்தில் வளர்ந்துள்ள செடிகளுக்கு நவீன முறையில் ட்ரீ கில்லர் எனும் ரசாயனம் ஊசி மூலம் செலுத்தி அழிக்கும் பணி நடந்து வருகிறது. 

தொல்லியல் அறிவியல் பிரிவை சேர்ந்த அதிகாரிகள் இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர். அதாவது கோவில் கோபுரங்களில் உள்ள செடிகளுக்கு ஊசி மூலம் ரசாயனம் செலுத்துவதால் சில நாட்களில் செடி பட்டு, முழுவதும் அழிந்து விடும். 

மறுபடியும் செடி வளராது. கைகளால் பிடுங்கினால் வேர் முழுவதும் வராது. மழை பெய்யும் போது மீண்டும் அவை முளைக்க தொடங்கும் என்பதால் இந்த ரசாயனம் மூலம் செடிகள் அழிக்கப்படுகிறது. 

செடிகள் அழிந்தபின்னர் வர்ணம் பூசும் பணி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story