திண்டுக்கல் நாகல்நகரில் மதுபோதையில் கார் டிரைவர் ரகளை
திண்டுக்கல் நாகல்நகரில் மதுபோதையில் கார் டிரைவர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் நாகல்நகர் ரவுண்டானா அருகே நேற்று காலை மதுபோதையில் வந்த ஒருவர் அந்த வழியாக சென்றவர்களை அவதூறாக பேசி ரகளையில் ஈடுபட்டார். மேலும் சாலையின் நடுவே நின்ற அவர், திண்டுக்கல்லுக்கு வந்த ஒரு பஸ்சை நிறுத்தி டிரைவருடன் வாக்குவாதம் செய்தார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்ததும் அங்கு விரைந்து வந்த வடக்கு போலீசார் போதை ஆசாமியை அப்புறப்படுத்திவிட்டு போக்குவரத்தை சீரமைத்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச்செல்ல முயன்றனர். ஆனால் அதற்குள் அந்த நபர் சாலையோரத்தில் உள்ள கம்பத்தில் முட்டிக்கொண்டார். இதனால் அவருடைய தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தோடியது.
இதையடுத்து 108 ஆம்புலன்சை போலீசார் வரவழைத்தனர். ஆனால் ஆம்புலன்சில் ஏற மறுத்து போலீசாரிடம் அந்த நபர் தகராறில் ஈடுபட்டார். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் போலீசார் அந்த நபரை குண்டுக்கட்டாக தூக்கி ஆம்புலன்சில் ஏற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அவர், தேனியை சேர்ந்த வாடகை கார் டிரைவரான கண்ணன் (வயது 38) என்பதும், வேலை விஷயமாக நேற்று முன்தினம் திண்டுக்கல்லுக்கு வந்த போது மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இந்த சம்பவம் திண்டுக்கல் நாகல்நகரில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story