புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை


புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 18 Sept 2021 10:06 PM IST (Updated: 18 Sept 2021 10:06 PM IST)
t-max-icont-min-icon

புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

நெல்லிக்குப்பம், 

கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாதசுவாமி கோவில் உள்ளது. நேற்று புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அதிகாலையில் சாமிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் தேவநாதசுவாமி அருள்பாலிக்க, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் கோவிலில் பிரம்ம உற்சவம் தொடங்கி 7-வது நாள் என்பதால், வெண்ணைத்தாழி சேவை நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் தேவநாதசுவாமி எழுந்தருளி கோவில் உட்புறத்தில் உலா வந்தார். 

கொரோனா தொற்று பரவலை தடுக்க வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் விழாக்காலங்களில் வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் தரிசனத்திற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் நேற்று முன்தினம் இரவே நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் திருவந்திபுரத்திற்கு வந்து காத்திருந்தனர். அவர்கள் நேற்று காலை எழுந்து சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு வந்தனர். ஆனால் கோவில் நடை சாத்தப்பட்டிருந்ததால், பக்தர்கள் கோவில் வெளிப்புறத்தில் உள்ள சாலையில் கற்பூரம் ஏற்றி கோபுர தரிசனத்தை பார்த்து சென்றனர். மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கெடிலம் ஆற்றங்கரையோரம் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கோவில் முன்பு பொதுமக்கள் கூடுவதை தடுக்கவும், குற்றச்செயல்கள் நடைபெறாமல் இருக்கவும் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சிறப்பு அபிஷேகம்

இதேபோல் விருத்தாசலம் பெரியார் நகரில் அமைந்துள்ள ராஜகோபால சுவாமி கோவில், வண்ணான்குடிகாடு, எரப்பாவூர், சாத்தியம், விளாங்காட்டூர், பூவனூர் ஆகிய ஊர்களில் உள்ள வரதராஜ பெருமாள் சுவாமி, ரெட்டிக்குப்பம், எடையூர், பெரம்பலூர், கோ.பவழங்குடி, ஆகிய ஊர்களில் உள்ள சீனிவாச பெருமாள் கோவில்கள் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் நேற்று பக்தர்கள் இன்றி சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடு நடந்தது.

Next Story