மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப்படுத்தும் திட்டம்


மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப்படுத்தும் திட்டம்
x
தினத்தந்தி 18 Sept 2021 10:11 PM IST (Updated: 18 Sept 2021 10:11 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக, நகர்புற பகுதிகளில் நாளை முதல் 25&ந் தேதி வரை நடைபெற உள்ள மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப்படுத்தும் திட்டம் குறித்து கலெக்டர் முருகேஷ் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக, நகர்புற பகுதிகளில் நாளை முதல் 25-ந் தேதி வரை நடைபெற உள்ள மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப்படுத்தும் திட்டம் குறித்து கலெக்டர் முருகேஷ் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

வடிகால் தூய்மைப்படுத்தும் திட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப்படுத்தும் திட்டம் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. 

கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி தூய்மைப்படுத்தும் பணி திட்டம் குறித்து பேசியதாவது:-

தற்போது தமிழகம் எதிர்நோக்கி உள்ள வடகிழக்கு பருவமழையினால் குடியிருப்பு பகுதிகளில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகும் அபாயம் உள்ளது. அதிகப்படியாக தேக்கமாகும் மழைநீரால் டெங்கு மற்றும் மலேரியா நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழ்நிலையும் உள்ளது. மழைநீர் சாக்கடையுடன் கலந்து தேங்குவதால் இதர தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. 

எனவே பருவமழையினால் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்த்திடும் வகையில் நாளை (திங்கட்கிழமை) முதல் 25&ந்தேதி (சனிக்கிழமை) வரை மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி முகாமாக அறிவித்து ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் உள்ள அனைத்து மழைநீர் வடிகால்களையும் 100 சதவீதம் தூர்வாரி தூர்மைப்படுத்த வேண்டும்.

மழைநீர் வடிகால்கள் அனைத்தையும் பெரிய மழைநீர் வடிகால், நடுத்தர மழைநீர் வடிகால் மற்றும் சிறிய மழைநீர் வடிகால் என வகைப்பாடு செய்யப்பட வேண்டும்.

பெரிய மழைநீர் வடிகால்களில் எந்திரங்களை பயன்படுத்தி தூர்வர வேண்டும். நடுத்தர மற்றும் சிறிய மழைநீர் வடிகால்களில் உள்ள படிவுகளை அகற்ற உள்ளாட்சிகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களையும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். 

பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் பணியில் ஈடுபட வேண்டும். போதுமான தளவாட சாமான்களை முன்னேற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும். உள்ளாட்சி அனைத்து வார்டுகளிலும் 6 நாட்களில் பணி முடிக்கும் வகையில் பகுதிகளை பிரித்துக்கொள்ள வேண்டும்.

ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும்

வடிகால் படிவு அகற்றப்பட்ட அன்றே கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும். வடிகால் மீது ஆக்கிரமிப்பு இருப்பின் முன்தினமே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சிறு பாலங்களில் உள்ள மின்சாரம், டெலிபோன் வயர்களை சம்பந்தப்பட்ட துறைக்கு தெரிவித்து மாற்றியமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். 

வடிகால் அடைப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் 100 மீட்டர் இடைவெளியில் கம்பி வலை அமைக்க வேண்டும். வடிகால் இணைப்பு இல்லாத இடங்களை கண்டறிந்து இணைக்க வேண்டும். திடக்கழிவு, கட்டிடக்கழிவு, செடி, கொடி புதர்களை முழுமையாக அகற்ற வேண்டும். 

சிறிய தெருக்களில் திடக்கழிவு சேகரமாகி இருந்தால் உடன் அகற்றி கிருமிநாசினி தெளிக்க வேண்டும். சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காத வகையில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பணிகள் முடிந்த பின்னர் கொசு மருந்து தெளிக்க வேண்டும்.
பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்க வேண்டும். பாதாள சாக்கடை கசடுகளை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். 

குடிநீர் குழாய் கசிவு மற்றும் தெருவிளக்கு எரியாமல் இருந்தால் சீரமைக்க வேண்டும். மேலும் நகராட்சி மற்றும் பேரூராட்களில் உள்ள கால்வாய்களை மழைநீர் வடிகால்கள் தூய்மை படுத்துவதன் மூலம் எதிர்வரும் வடகிழக்கு பருவ மழை காலத்தில் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்குவது தவிர்க்கபடுவதுடன் தேங்கி நிற்கும் நீரினால் ஏற்படக்கூடிய நோய் தொற்று தடுக்கப்படும். 

இவ்வாறு அவர் கூறினார். 

நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரும், கூடுதல் கலெக்டருமான பிரதாப் மற்றும் நகராட்சி, பேரூராட்சி, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story