புரட்டாசி முதல் சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது
உளுந்தூர்பேட்டை
பரிக்கல் லட்சுமி நரசிம்மர்
புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த கோவிலில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் கோவில் வளாகத்தில் அத்தி லட்சுமி நரசிம்மர் சிலை வைக்கப்பட்டு கடந்த 6 மாதங்களுக்கு மேலாக வழிபாடு நடைபெற்று வருகிறது. நேற்று காலை உற்சவர் லட்சுமி நரசிம்மருக்கு பால், இளநீர், தயிர், நெய் உள்ளிட்ட 12 வகையான நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து அலங்காரம், மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
தியாகதுருகம், சங்கராபுரம்
அதேபோல் தியாகதுருகம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவிலில் அதிகாலை 5.30 மணி அளவில் அபிஷேக ஆராதனை, திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் மதியம் 11 மணி முதல் 11.40 மணி வரை சிறப்பு மலர் அபிஷேகமும், தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டனர்.
சங்கராபுரம் மணி நதிக்கரை அருகே உள்ள அலமேலு மங்கை சமேத வெங்கடேசபெருமாள் கோவிலில் காலை 7 மணிக்கு சாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போல் தேவபாண்டலம் சவுந்தரவல்லி தாயார் சமேத பார்த்தசாரதி பெருமாள், குளத்தூர் மற்றும் தியாகராஜபுரம் லட்சுமி நாராயண பெருமாள் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோவில்கள் மற்றும் காட்டுவன்னஞ்சூர் ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
விழுப்புரம்
விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் கோவிலில் உள்ள வரதராஜபெருமாளுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஆனந்த வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, சாமிக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதேபோல் கோலியனூர் வரதராஜபெருமாள், வளவனூர் லட்சுமி நாராயண பெருமாள், அரசமங்கலம் வரதராஜபெருமாள் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பக்தர்கள் இன்றி எளிமையான முறையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story