தினத்தந்தி புகார் பெட்டி


பெரம்பலூர்
x
பெரம்பலூர்
தினத்தந்தி 18 Sept 2021 11:33 PM IST (Updated: 18 Sept 2021 11:33 PM IST)
t-max-icont-min-icon

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சாலையின் இருபுறமும் பள்ளம் 
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி வழியாக முத்துசேர்வாமடம் கிராமத்திற்கு செல்லும் சாலை தரம் உயர்த்தப்பட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக புதிய தார் சாலை அமைக்கப்பட்டது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் போடப்பட்ட தார் சாலையின் இரண்டு புறமும் சுமார் ஒரு அடிக்கும் மேலாக பள்ளம் உள்ளது. இதனால் சாலையில் எதிரே வரும் வாகனங்களால் சைக்கிளில் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் ஏற்பட்டு செல்கின்றனர். இதுபோன்ற விபத்துகள் நடைபெறாமல் இருக்க, சாலையின் இரு புறமும் உள்ள பள்ளங்களில் கிராவல் மண் கொண்டு நிரப்பப்பட வேண்டும்.
 கதிரவன், மீன்சுருட்டி, அரியலூர்.

சமூக விரோத செயல்கள் நடக்க வாய்ப்பு 
திருச்சி மாவட்டம் நாகமங்கலம் பஞ்சாயத்துக்குட்பட்ட  ஜாஸ்மின் நகர், டைமண்ட் நகர், விஜயலட்சுமி நகர்  ஆகிய பகுதிகளில் உள்ள மின் கம்பங்களில் மின்விளக்குகள் இல்லை. இதனால் பகல் வெளிச்சம் குறைந்த பிறகு சமூக விரோத செயல்கள் நடைபெற ஏதுவாக அமைந்துள்ளது. இது தவிர விஷ ஜந்துக்கள் நடமாடுகின்றன. இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் வெளியே வர அஞ்சுகின்றனர்.  எனவே சம்பந்தப்ட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து உரிய வசதிகள் செய்து தர வேண்டும்.
விஜயா, நாகமங்கலம், திருச்சி.

வீதியின் நடுவே மின்கம்பம் 
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம்  காமாட்சிபுரம் 2-வது வீதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களின் வீடுகளுக்கு அப்பகுதியில் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் வீதியின் நடுவே ஒரு மின் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரத்தில் நடந்து, வாகனங்களில் செல்பவர்கள் வீதியின் நடுவே அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் இருப்பது தெரியாமல் அதில் மோதி காயம் அடைகின்றனர். எனவே வீதியின் நடுவே உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும். 
கே.குப்புச்சாமி, காமாட்சிபுரம், கரூர். 

பள்ளிகளில் ஆய்வு செய்ய கோரிக்கை 
அரியலூர் மாவட்டத்தில் மாணவ- மாணவிகளுக்கு கொரோனா தொற்று பரவி விடுமோ என்ற அச்சம் பெற்றோர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. எனவே அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை  வகுப்பறையில் கடைபிடிக்கின்றனரா? என அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். 
ஆறு.மதியழகன் தா.பழூர், அரியலூர். 

பெண்கள், குழந்தைகள் அச்சம் 
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே பட்டவர்த்தி சாலையில் உள்ள சோபியா பள்ளி எதிரே உள்ள சந்தில்  தனியார் மருத்துவமனை பின்புறம் தினமும் நிறைய பேர் நின்று பகல் இரவு என என்னேரமும் கூட்டம் கூடி மது அருந்துவது, கஞ்சா புகைப்பது உள்பட சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி பெண்கள், குழந்தைகள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், சத்திரம் பஸ் நிலையம், திருச்சி.

சாலையில் ஓடும் கழிவுநீர்
 புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் தெற்கு ரத வீதியில் உள்ள உணவகங்களில்   கழிவுநீரை சாலையில் ஊற்றி விடுகின்றனர். இதனால் சாலை சேதமடைந்து இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ‘
முத்துராமன், கீரனூர், புதுக்கோட்டை.

நோய் பரவும் அபாயம் 
திருச்சி நம்பர் 1  டோல்கேட்  சமயபுரம் பஸ் நிறுத்தம் அருகில் செல்லும் வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால்  வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் செல்லமுடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அதில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 க.தனபால், நெ.1 டோல்கேட், திருச்சி.

தேங்கி நிற்கும் கழிவு நீரால் துர்நாற்றம்
பெரம்பலூர் மாவட்டம் திருப்பெயரில் சாலையோரம் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாயின் அருகே உள்ள கழிவுநீர் வாய்க்காலில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே குடிநீர் குழாயை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் அல்லது கழிவுநீர் வாய்க்காலை சரிசெய்ய வேண்டும். 
மாரியப்பன், திருப்பெயர், பெரம்பலூர்.

குடிநீர் இன்றி பொதுமக்கள் அவதி 
திருச்சி கருமண்டபம் செல்வநகர் 2-வது வீதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக மாநகராட்சி சார்பில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக செல்வநகர் 2-வது வீதியின் கடைசி பகுதிக்கு தண்ணீர் வரவில்லை. இந்த நிலை அடிக்கடி நடைபெறுவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண வேண்டும். 
ஜெகன்நாதன், கருமண்டபம், திருச்சி. 

குண்டும், குழியுமான தார் சாலை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி களக்காடு சிலோன் காலனி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் அதில் வாகனத்தை விட்டு விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், களக்காடு, புதுக்கோட்டை.

Next Story