மழைநீரில் கார் சிக்கி பெண் டாக்டர் சாவு: ரெயில்வே மேம்பாலம் அமைத்து தரக்கோரி கிராமமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
மழைநீரில் கார் சிக்கி பெண் டாக்டர் பரிதாபமாக இறந்தார். இதையொட்டி ரெயில்வே மேம்பாலம் அமைத்து தரக்கோரி கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அன்னவாசல்:
பெண் டாக்டர் சாவு
புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. அதன் ஒரு பகுதியாக நார்த்தாமலை பொம்மாடிமலை தொடையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பெய்த பலத்த மழையால் பொம்மாடிமலையிலிருந்து, தொடையூருக்கு செல்லக்கூடிய தரைப்பாலம் முழுமையாக மழை நீர் சூழ்ந்து நிரம்பி உள்ளது.
இதையறியாத ஓசூரில் பணிபுரியும் பெண் மருத்துவர் சத்யா தனது மாமியார் ஜெயம்மாளுடன் காரில் பயணித்த போது, கார் நீரில் மூழ்கியது. காரில் பயணித்த சத்யாவின் மாமியார் ஜெயம்மாள் கார் கதவை திறந்து நீச்சலடித்து வெளியேறிய நிலையில், சத்யா சீட் பெல்ட் போட்டு இருந்ததால் தப்பிக்க முடியாமல் டாக்டர் சத்யா காரிலேயே இருந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அப்பகுதி வழியாக சென்றவர்கள் டிராக்டர் உள்ளிட்ட உதவிகளுடன் கயிறு கட்டி இழுத்து காரில் இருந்த சத்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாலை மறியல்
இந்நிலையில், டாக்டர் உயிரிழப்பிற்கு காரணமாக இருந்த தரைப்பாலத்தை மூடி மேம்பாலமாக அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கொட்டும் மழையில் நேற்று முன்தினம் இரவு புதுக்கோட்டை& திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் ஏராளமானோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த வெள்ளனூர் போலீசார் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு தீர்வு ஏற்படுத்தி தரப்படும் என்று வாக்குறுதி கொடுத்ததையடுத்து மறியலை கைவிட்டு கிராமமக்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில் தற்போது வரை அந்த தரைப்பாலத்தில் மாட்டிய கார் மீட்கப்படாமல் உள்ளது. மேலும் கார் சிக்கிய நிலையில், அதன் பின்னர் அந்த வழியாக சென்ற சரக்கு லாரியும் பாலத்தில் மூழ்கி நின்றுள்ளது. இதுகுறித்து வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சத்யாவின் கணவர் சிவகுமார் பெங்களூரில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
மீண்டும் சாலை மறியல்
இந்தநிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருச்சி&புதுக்கோட்டை சாலையில் நேற்று மீண்டும் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் தகவல் அறிந்த அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதுகுறித்து கிராமமக்கள் கூறுகையில், ஆளில்லா ரெயில்வே கேட்டை மூட வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒன்றிய ரெயில்வே துறை இந்த தரைப்பாலத்தை சுமார் ரூ.3 கோடியில் அமைத்து. பாலம் அமைக்கும் போதே பல்வேறு கட்ட போராட்டத்தில் கிராமமக்கள் ஈடுபட்டும், தங்களது போராட்டத்திற்கு செவி சாய்க்கவில்லை. இந்த பாலத்தை அமைத்ததற்கு பதிலாக மேம்பாலம் ஆகவே அமைத்திருக்கலாம். சாதாரண மழைக்கே இந்த வழியை கடக்க முடியாமல் கிராமமக்கள் அவதி அடைந்து வருகிறோம். தரைப்பாலம் அமைத்துவிட்டு முறையாக ஆல் நியமித்து மழை நீரை வெளியேற்ற மோட்டார்கள் அமைத்து தரப்படும் என்று வாக்குறுதி கொடுத்தனர். ஆனால் அது முறைப்படி தங்களுக்கு அமைத்துக் கொடுக்கவில்லை.
தரைப்பாலத்தில் மின் விளக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. தரைப்பாலமும் ஆங்காங்கே விரிசலும், பாலத்தில் ஆங்காங்கே வெடிப்பு ஏற்பட்டு உள்ளது. சாதாரண மழைக்கே தங்கள் ஊருக்கு செல்ல முடியாமல் வாகனங்களை பாலத்திற்கு அருகே நிறுத்தி விட்டு நீச்சலடித்து செல்லக்கூடிய சூழ்நிலை உள்ளது. ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் கடக்ககூடிய தங்கள் ஊரை மழை நேரத்தில் சுமார் 10 கி.மீ. வரை சுற்றி செல்லக் கூடிய அவலநிலை உள்ளது. ஆளில்லா ரெயில்வே கேட்டில் ரெயில் மோதி உயிர் இழந்தாலும் பரவாயில்லை, தங்களுக்கு இந்த தரைப்பாலம் வேண்டாம். பாலமும் தரமற்ற முறையில் அமைத்துள்ளதால் இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக இந்த பாலத்தை அகற்றிவிட்டு மேம்பாலம் அமைத்து தர வேண்டும். பல உயிர்களை காப்பாற்றிய பெண் மருத்துவர் இந்த பாலத்தில் மூழ்கி உயிரிழந்த கூடிய சூழ்நிலையில் கிராம மக்களின் நிலை மிகவும் கவலை தரக் கூடியதாக இருக்கிறது. இதில் ஒன்றிய மாநில அரசுகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story