பெருமாள் கோவில்களுக்கு வெளியே நின்று பக்தர்கள் தரிசனம்


பெருமாள் கோவில்களுக்கு வெளியே நின்று பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 19 Sept 2021 12:05 AM IST (Updated: 19 Sept 2021 12:05 AM IST)
t-max-icont-min-icon

புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி நேற்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களுக்கு வெளியே நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


திருப்பூர்
புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி நேற்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களுக்கு வெளியே நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். 
பெருமாள் கோவில்கள்
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பக்தர்கள் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவது வழக்கம். இதன்காரணமாக பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பக்தர்கள் அதிக அளவில் வந்து தரிசனம் செய்வார்கள். கொரோனா பரவல் காரணமாக அடுத்த மாதம் அக்டோபர் 31&ந் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்தநிலையில் புரட்டாசி மாதம் பிறந்து நேற்று முதல் சனிக்கிழமை என்றாலும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்கள் பக்தர்களின் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. பெருமாள் கோவில்கள் முன்பு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
புரட்டாசி சனிக்கிழமை
 திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி நேற்று சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார பூஜைகள் நடைபெற்றது. ஆனால் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் கோவிலுக்கு வெளியே வாசலில் நின்றபடி கற்பூரம் ஏற்றியும், தீபம் ஏற்றியும் வழிபட்டு புறப்பட்டனர். திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள திருப்பூர் திருப்பதி கோவிலில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதுபோல் மாவட்டம் முழுவதும் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. ஆனால் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை.  
நேற்று சனி பிரதோஷம் என்பதால் ஈஸ்வரன் கோவிலில் மாலையில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியிலும் பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை. சிவாச்சாரியார்கள் பூஜை நடத்தினார்கள். 

Next Story