வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
அரவக்குறிச்சி அருகே வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
அரவக்குறிச்சி,
வாலிபர் கொலை
அரவக்குறிச்சி அருகே சூரப்பநாயக்கனூரை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவருடைய மகன் ரமேஷ் (வயது 24). இவர் பள்ளப்பட்டி அருகே பூமதேவத்தை சேர்ந்த பெருமாள்சாமி (54) என்பவருடைய எண்டர்பிரைசஸ் கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 15-ந் தேதி இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
லிங்கமநாயக்கன்பட்டி ஊராட்சி புளியம்பட்டி பயணிகள் நிழற்குடை அருகில் வந்தபோது ரமேஷை மர்ம ஆசாமிகள் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் உத்தரவின்பேரில் அரவக்குறிச்சி துணை சூப்பிரண்டு முத்தமிழ் செல்வன் மேற்பார்வையில் அரவக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் தலைமையிலான தனிப்படையினர் கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.
மேலும் ஒருவர் கைது
இந்த கொலை வழக்கு தொடர்பாக கடந்த 16-ந் தேதி திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா மேலகோவில்பட்டியை சேர்ந்த பிரவீன்குமார் (31), ராபர்ட் (22), தும்பலப்பட்டியை சேர்ந்த அழகு சரவணன் (27), வேல்முருகன் (27) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 4 பேரும் அரவக்குறிச்சி சார்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு குளித்தலை கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த சூரப்பநாயக்கனூரை சேர்ந்த சண்முக வேலுவை (31) போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில் சண்முக வேலுவின் மனைவிக்கும், அவரது அண்ணிக்கும் ரமேஷ் அடிக்கடி தொந்தரவு கொடுத்ததால் கூலி படையினர் மூலம் அவரை கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story