புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள்
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
கிருஷ்ணகிரி:
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
புரட்டாசி முதல் சனிக்கிழமை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புரட்டாசி மாதத்தில் பெருமாளை வணங்கும் பக்தர்கள் விரதமிருப்பது வழக்கம். இந்த ஆண்டு புரட்டாசி மாதம் கடந்த 17&ந் தேதி தொடங்கியது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழக அரசு வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய 3 நாட்களில் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என அறிவித்துள்ளது.
இதனை பின்பற்றும் வகையில் இந்த ஆண்டில் 5 சனிக்கிழமைகளிலும் புரட்டாசி திருவிழாவில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் புரட்டாசி முதல் சனிக்கிழமையான நேற்று பெருமாள் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டு, கோவில் பூசாரிகள் மட்டுமே பங்கேற்று ஆகம விதிகள் படி சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.
சிறப்பு பூஜைகள்
ஆனாலும் பக்தர்கள் கோவிலுக்கு வெளியே இருந்தவாறு சாமியை தரிசனம் செய்தனர். அந்த வகையில் கிருஷ்ணகிரியில் பிரசித்தி பெற்ற கணவாய்பட்டி வெங்கட்ரமண சாமி கோவில், பொன்மலை சீனிவாச பெருமாள் கோவில், பாளேகுளி அனுமந்தராய சாமி, கிருஷ்ணகிரி காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில் பெருமாள் சன்னதி, மலையப்ப சீனிவாச பெருமாள் கோவில் உள்பட பல்வேறு பெருமாள் கோவில்களில் பூஜைகள் நடந்தன.
இதேபோன்று குருபரப்பள்ளி, வேப்பனப்பள்ளி, ராயக்கோட்டை, கெலமங்கலம், ஊத்தங்கரை, கல்லாவி, மத்தூர், போச்சம்பள்ளி, பர்கூர் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் பக்தர்கள் வழிபட அனுமதி மறுக்கப்பட்டது.
அனுமதிக்க வேண்டும்
இது குறித்து பக்தர்கள் கூறுகையில், வழக்கமாக புரட்டாசி மாதம் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு கடந்த ஆண்டு வயதானவர்கள், சிறுவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த முறை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மற்றும் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்து சாமி தரிசனம் செய்திட அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story