புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு


புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 19 Sept 2021 12:59 AM IST (Updated: 19 Sept 2021 12:59 AM IST)
t-max-icont-min-icon

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

தர்மபுரி:
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.
சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பெருமாள் கோவில்களில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் விரதம் இருந்து வழிபாடு நடத்துவது வழக்கமாகும். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் ஆகம விதிகள்படி நடைபெறும் என்றும், பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என்றும்  மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. ஆனால் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.
தர்மபுரி கோட்டை வர மகாலட்சுமி உடனாகிய பரவாசுதேவ சாமி கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்கார சேவையும், உபசார பூஜைகள் மற்றும் மஹா தீபாராதனையும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி கும்பிட வந்தனர். ஆனால் அவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். இதேபோல் தர்மபுரி கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில், குமாரசாமிப்பேட்டை சென்னகேசவ பெருமாள் கோவில் ஆகிய கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
அதகபாடி கோவில்
இதேபோன்று அதகபாடி லட்சுமி நாராயணசாமி கோவில், பழைய தர்மபுரி வரதகுப்பம் வெங்கடரமண சாமி கோவில், சோகத்தூர் திம்மராய பெருமாள் கோவில், செட்டிகரை பெருமாள் கோவில், அக்கமனஅள்ளிஆதிமூல பெருமாள் கோவில், மணியம்பாடி வெங்கட்ரமண சாமி கோவில் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்த வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி கிடையாது என்பதால் அவர்கள் கோவிலுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பினர். ஒரு சில பக்தர்கள் கோவிலுக்கு வெளியே கோபுரம் மற்றும் கொடி மரத்தை வழிபட்டு சென்றனர்.
இதேபோன்று அரூர், பென்னாகரம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், கம்பைநல்லூர், ஏரியூர், நல்லம்பள்ளி, கடத்தூர், மாரண்டஅள்ளி, பொம்மிடி உள்ளிட்ட அனைத்து ஊர்களிலும் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Next Story