15 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்து 2½ வயது குழந்தை பலி


15 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்து 2½ வயது குழந்தை பலி
x
தினத்தந்தி 19 Sept 2021 2:33 AM IST (Updated: 19 Sept 2021 2:33 AM IST)
t-max-icont-min-icon

பெலகாவி அருகே, 15 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2½ வயது ஆண் குழந்தை பரிதாபமாக இறந்தது. அந்த குழந்தையின் உடலை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

பெலகாவி:

குழந்தை மாயம்

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் ராயபாக் தாலுகா ஆலக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சித்தப்பா. இவருக்கு திருமணம் முடிந்து மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு சரத் ஹசிரே(வயது 2½) என்ற ஆண் குழந்தை இருந்தது. சித்தப்பா தனது குடும்பத்தினருடன் ஆலக்கனூர் கிராமத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டின் முன்பு நின்று விளையாடி கொண்டு இருந்த குழந்தை சரத் திடீரென மாயமானது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த சித்தப்பா மற்றும் அவரது குடும்பத்தினர் குழந்தை சரத்தை தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. இதனால் குழந்தையை யாரோ கடத்தி சென்றதாக, ஹாருகேரி போலீஸ் நிலையத்தில் சித்தப்பா புகார் அளித்து இருந்தார். அந்த புகாரின்பேரில் குழந்தை சரத்தை போலீசாரும் தேடிவந்தனர்.

7 அடி ஆழத்தில்...

இந்த நிலையில் சித்தப்பா வசித்த வரும் வீட்டில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் ஆழ்துளை கிணற்றுக்குள் 15 அடி ஆழத்தில் குழந்தை சரத் விழுந்து கிடந்தது. அந்த குழந்தை 7 அடி ஆழத்தில் சிக்கி இருந்தது. குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்து கிடப்பதைப் பார்த்து சித்தப்பாவும், அவரது மனைவியும் கதறி அழுதனர். பின்னர் இதுபற்றி ஹாருகேரி போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சரத்தை மீட்க நடவடிக்கை எடுத்தனர்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்து 24 மணி நேரம் ஆனதால் தண்ணீர், உணவு இன்றி குழந்தை சோர்வாக இருந்துள்ளது. மேலும் குழந்தையின் அழுகுரலும் கேட்காததால் அதன் கதி என்ன என்பது தெரியாமல் இருந்தது. தொடர்ந்து மீட்பு பணி நடந்து வந்த நிலையில் நேற்று இரவு குழந்தை சரத் இறந்து விட்டதாக போலீஸ் சூப்பிரண்டு லட்சுமண் நிம்பரகி அறிவித்தார். இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-

மூடப்படாத ஆழ்துளை கிணறு

குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து 24 மணி நேரம் ஆன நிலையில் ஆக்சிஜன் கிடைக்காமலும், தண்ணீர் மற்றும் உணவு இன்றியும் உடல்நிலை பாதிக்கப்பட்டு பரிதாபமாக இறந்து விட்டது. அந்த குழந்தையின் உடலை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இந்த ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டு உள்ளது. ஆனால் அந்த ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வரவில்லை. இதனால் அந்த ஆழ்துளை கிணறு பயன்பாட்டில் இல்லாமல் இருந்து உள்ளது. அந்த கிணற்றை யாரும் மூடவில்லை. ஆழ்துளை கிணறை தோண்டியது யார் என்று விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

இச்சம்பவம் குறித்து ஹாருகேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் பெலகாவி மட்டுமின்றி கர்நாடகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story