பசவராஜ் பொம்மை தலைமையிலேயே சட்டசபை தேர்தலை சந்திப்போம் - மேலிட பொறுப்பாளர் அருண்சிங் பேட்டி
எடியூரப்பா சுற்றுப்பயணம் மேற்கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும், பசவராஜ் பொம்மை தலைமையிலேயே அடுத்த சட்டசபை தேர்தலை சந்திப்போம் என்றும் பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் தெரிவித்துள்ளார்.
தாவணகெரே:
தாவணகெரேயில் நேற்று கர்நாடக மாநில மேலிட பொறுப்பாளர் அருண்சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
சுற்றுப்பயணத்தில் பிரச்சினை இல்லை
பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் எடியூரப்பா. தென்னிந்தியாவில் பா.ஜனதா ஆட்சிக்கு வருவதற்கு காரணமாக இருந்தவர் எடியூரப்பா. அவர், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதில் எந்த விதமான பிரச்சினையும் இல்லை. கட்சியை வளர்க்க மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதை தடை செய்ய முடியாது.
எடியூரப்பாவை கட்சியில் இருந்து ஓரங்கட்ட நினைப்பதாக வெளியாகும் தகவல்களும் உண்மை இல்லை. கட்சியை வளர்க்கும் பணிகளில் அவர் தொடர்ந்து ஈடுபடுவார். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். மாநிலத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தின் வளர்ச்சியில் மட்டும் அவர் கவனம் செலுத்துவதில்லை. அனைத்து சமுதாயத்தின் வளர்ச்சியிலும் பசவராஜ் பொம்மை கவனம் செலுத்தி வருகிறார்.
பசவராஜ் பொம்மை தலைமையிலேயே...
மாநில மக்களுக்கு பயன்படும் வகையிலான வேலைகளை அவர் செய்து வருகிறார். பசவராஜ் பொம்மை தலைமையில் அடுத்து நடைபெறும் சட்டசபை தேர்தல் சந்திக்கப்படும் என்று ஏற்கனவே மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்திருக்கிறார். அதன்படி, பசவராஜ் பொம்மை தலைமையிலேயே அடுத்த சட்டசபை தேர்தலை சந்திப்போம்.
தாவணகெரேயில் நடைபெறும் 2 நாட்கள் கூட்டத்தில் மாநிலத்தில் பா.ஜனதாவை பலப்படுத்துவதற்காக எடுக்க வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும். மாவட்ட மற்றும் தாலுகா பஞ்சாயத்து தேர்தல் குறித்து விரிவாக ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அருண்சிங் கூறினார்.
Related Tags :
Next Story