சேலத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் நகை திருடிய பெண் கைது
சேலத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் நகை திருடிய வழக்கில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சேலம்:
சேலத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் நகை திருடிய வழக்கில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
ஓய்வுபெற்ற ஆசிரியர்
சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர் கடந்த மாதம் 4-ந் தேதி தனது மனைவி பிரேமாவுடன் சேலத்தில் உள்ள உறவினர் ஒருவருடைய வீட்டுக்கு வந்தார். முன்னதாக அவர்கள் சீலநாயக்கன்பட்டியில் இருந்து சேலம் பழைய பஸ் நிலையத்துக்கு அரசு பஸ்சில் வந்த போது அவர்கள் வைத்திருந்த ரூ.12 லட்சம் மதிப்பிலான வைர, தங்க நகைகள் திருட்டு போனது.
இதுகுறித்து பாலசுப்பிரமணியம் சேலம் டவுன் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இந்த திருட்டில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
பெண் கைது
இந்த நிலையில் நேற்று முன்தினம் சேலம் பழைய பஸ்நிலையம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள கத்தமடுவு பகுதியை சேர்ந்த பரிமளா(வயது 38) என்பதும், மேலும் 2 பெண்களுடன் சேர்ந்து பாலசுப்பிரமணியம் வைத்திருந்த வைர, தங்க நகைகளை திருடியதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் பஸ்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பரிமளா தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 2 பெண்கள் வேறு ஒரு திருட்டு வழக்கில் கைதாகி தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story