பா.ஜனதா கட்சி கொடிக்கம்பம் வெட்டி சாய்ப்பு-ஆத்தூரில் பரபரப்பு
ஆத்தூரில் பா.ஜனதா கட்சி கொடிக்கம்பம் வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆத்தூர்:
ஆத்தூரில் பா.ஜனதா கட்சி கொடிக்கம்பம் வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வெட்டி சாய்ப்பு
சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி பிறந்த நாளை பா.ஜனதா கட்சியினர் கொண்டாடினார்கள். இதையொட்டி அங்கு பா.ஜனதா கட்சி கொடிக்கம்பம் புதிதாக அமைக்கப்பட்டு, அதில் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கினார்கள். இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் கொடிக்கம்பத்தை துண்டு துண்டாக வெட்டி சாய்த்துள்ளனர்.
மேலும் கொடிக்கம்பத்தின் மேலே இருந்த தாமரை சின்னத்தை உடைத்துப்போட்டதுடன், பா.ஜனதா கட்சி கொடியை கிழித்து எறிந்து விட்டு சென்றுள்ளனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை அதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் சேலம் கிழக்கு மாவட்ட பா.ஜனதா கட்சி தலைவர் வக்கீல் மணிகண்டனுக்கு தகவல் தெரிவித்தனர்.
பேச்சுவார்த்தை
இதன் பேரில் மணிகண்டன் மற்றும் கட்சி நிர்வாகிகள் வெட்டி சாய்க்கப்பட்ட கொடிக்கம்பம் அருகே திரண்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. இதைத்தொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டு இம்மானுவேல் ஞானசேகரன் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் திரண்டு இருந்த பா.ஜனதா கட்சியினருடன், போலீஸ் துணை சூப்பிரண்டு இம்மானுவேல் ஞானசேகரன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கொடிக்கம்பத்தை வெட்டி சாய்த்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து ஆத்தூர் நகர செயலாளர் செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொடிக்கம்பத்தை வெட்டி சாய்ந்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் ஆத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story