குன்னூர் ஏல மையத்தில் 75 சதவீத தேயிலைத்தூள் விற்பனை
குன்னூர் ஏல மையத்தில் 75 சதவீத தேயிலைத்தூள் விற்பனை
குன்னூர்
குன்னூர் தேயிலை ஏல மையத்தில் 75 சதவீத தேயிலைத்தூள் விற்பனையாகி உள்ளதாக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
தேயிலை ஏல மையம்
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு தேயிலை தொழிற்சாலைகள் உற்பத்தி செய்யும் தேயிலைத்தூள் குன்னூர் தேயிலை ஏல மையத்தில் ஏல முறை மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த ஏலம் குன்னூர் தேயிலை வர்த்தகர் அமைப்பு மூலம் வாரந்தோறும் வியாழன், வெள்ளிக்கிழமை என 2 நாட்கள் நடத்தப்படுகிறது. ஏலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்து கொண்டு தேயிலைத் தூளை ஏலம் எடுக்கிறார்கள்.
விற்பனை எண் 37-க்கான ஏலம் கடந்த 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. ஏலத்திற்கு மொத்தம் 20 லட்சத்து 25 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் வந்தது. இதில் 14 லட்சத்து 98 ஆயிரம் கிலோ இலை ரகமாகவும், 5 லட்சத்து 27 ஆயிரம் கிலோ டஸ்ட்ரகமாகவும் இருந்தது.
75 சதவீதம் விற்பனை
இந்த ஏலத்தில் 75 சதவீத தேயிலைத்தூள் விற்பனையானது. விற்பனையான தேயிலைத்தூளின் அளவு 15 லட்சத்து 8 ஆயிரம் கிலோவாக இருந்தது. இதன் மதிப்பு ரூ.14 கோடியே 18 லட்சம் ஆகும். விற்பனையான அனைத்து தேயிலைத்தூள் ரகங்களுக்கும் ஒரு ரூபாய் விலை உயர்வு ஏற்பட்டது.
சி.டி.சி. தேயிலைத்தூளின் உயர்ந்தபட்ச விலையாக கிலோ ஒன்று ரூ.306 க்கும், ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூள் கிலோ ஒன்று ரூ.296-க்கும் ஏலம் போனது.
சராசரி விலையாக இலை ரகத்தின் சாதாரண வகை கிலோ ஒன்று ரூ.74-ல் இருந்து ரூ.82 வரையும், விலை உயர்ந்த தேயிலைத்தூள் கிலோ ஒன்று ரூ.143-ல் இருந்து ரூ.196 வரையும் ஏலம் சென்றது.
டஸ்ட்ரகத்தின் சாதாரண வகை கிலோ ஒன்று ரூ.75-ல் இருந்து ரூ.79 வரையும், விலை உயர்ந்த தேயிலைத்தூள் கிலோவுக்கு ரூ.152-ல் இருந்து ரூ.234 வரையும் ஏலம் போனது. விற்பனை எண் 38-க்கான ஏலம் வருகிற 23, 25-ந் தேதிகளில் நடக்கிறது.
Related Tags :
Next Story