வரதட்சணை கொடுமையில் பெண் தற்கொலை முயற்சி கணவர், மாமனார் கைது
வரதட்சணை கொடுமை காரணமாக நடந்த பஞ்சாயத்தின்போது தாக்கியதால் அவமானம் அடைந்த பெண் தற்கொலைக்கு முயன்றார். இது தொடர்பாக கணவர், மாமனார் கைது செய்யப்பட்டனர்.
தேவதானப்பட்டி:
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள ஜி.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் காமராஜ்(வயது 61). இவரது மகன் பண்டியராஜன் (28) பெங்களூருவில் தவணை முறையில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த சங்கீதாவுக்கும் (23) கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு வயதில் மகள் உள்ளார்.
திருமணம் ஆன புதிதில் இருவரும் பெங்களூருவில் வசித்து வந்தனர். சங்கீதா 5 மாத கர்ப்பமாக இருந்தார். அப்போது பாண்டியராஜன் சங்கீதாவை அவரது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு பெங்களூர் சென்று விட்டார். இந்தநிலையில் பாண்டியராஜனின் தந்தை காமராஜ், தாயார் அமராவதி ஆகியோர் சங்கீதாவின் பெற்றோரிடம் வரதட்சணையாக வளைகாப்புக்கு 5 பவுன் நகை கேட்டனர். மேலும் சங்கீதா குழந்தை பெற்ற பிறகும் குழந்தையை வந்து பார்க்கவில்லை.
இதைத்தொடர்ந்து சங்கீதாவின் பெற்றோர், காமராஜிடம் தனது மகளை அழைத்து செல்லுமாறு கூறினர். ஆனால் காமராஜ் தரப்பினர் வளைகாப்புக்கான நகை மற்றும் குழந்தை பெற்ற பிறகு போட வேண்டிய நகையை சேர்த்து போட்டால்தான் சங்கீதாவை வீட்டிற்குள் விடுவோம் என கூறினர்.
இந்த வரதட்சணை கொடுமை காரணமாக கடந்த 17-ந்தேதி ஊரில் உள்ள பெரியோர் முன்னிலையில் வைத்து பஞ்சாயத்து பேசினர். அப்போது பாண்டியராஜன் மற்றும் அவரது பெற்றோர் சேர்ந்து சங்கீதாவை சரமாரியாக தாக்கினர். இது சங்கீதாவுக்கு அவமானத்தை ஏற்படுத்தியது. இதனால் மனம் உடைந்த அவர் நேற்று முன்தினம் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதையடுத்து மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியராஜன், அவரது தந்தை காமராஜ் ஆகியோரை கைது செய்தனர். அமராவதியை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story