மர்ம சாவில் திடீர் திருப்பம்; முகநூலில் பெண் போல் பழகி ஏமாற்றிய வாலிபர் கொலை


மர்ம சாவில் திடீர் திருப்பம்; முகநூலில் பெண் போல் பழகி ஏமாற்றிய வாலிபர் கொலை
x
தினத்தந்தி 19 Sept 2021 10:18 PM IST (Updated: 19 Sept 2021 10:18 PM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரம் அருகே மர்ம சாவில் திடீர் திருப்பமாக, முகநூலில் பெண் போல் பழகி ஏமாற்றிய வாலிபர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே, வாலிபர் மர்ம சாவு வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. முகநூலில் பெண் போல் பழகி ஏமாற்றியதால் அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

வாலிபர் பிணம்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள மேலஈராலை சேர்ந்தவர் பால்ராஜ் மகன் முருகன் (வயது 27). 10&ம் வகுப்பு வரை படித்தவர். விவசாய கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. முருகன் கடந்த 13&ந்தேதி காலை தூத்துக்குடியில் நடைபெற்ற உறவினர் இல்ல புதுமனை புகுவிழாவுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் மறுநாள் இரவு வரை அவர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில், கடந்த 15&ந்தேதி காலை எட்டயபுரம் அருகே மேலக்கரந்தை மயானம் அருகில் முருகன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாசார்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். முருகன் உடல் அருகில் மதுபாட்டில், தண்ணீர் பாட்டில் போன்றவை கிடந்தன. பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முருகன் தலையில் அடிபட்டு இருந்த காரணத்தினால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கருதிய போலீசார், சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தனிப்படை விசாரணை

இதில் துப்பு துலக்க விளாத்திகுளம் துணை சூப்பிரண்டு பிரகாஷ் மேற்பார்வையில், மாசார்பட்டி இன்ஸ்பெக்டர் கோகிலா, சப்&இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது எட்டயபுரம் பஸ் நிலைய பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், முருகனுடன் ஒருவர் செல்வதுபோல் காட்சி பதிவாகி இருந்தது. இதைத்தொடர்ந்து முருகன் செல்போனை கைப்பற்றி அதனை ஆய்வு செய்தனர். அதில், முருகன் செல்போனுக்கு அடிக்கடி ஒரு செல்போன் எண்ணில் இருந்து அழைப்பு வந்ததை கண்டறிந்தனர்.

தொழிலாளி கைது

இதைத்தொடர்ந்து அந்த செல்போன் எண் யாருடையது? என போலீசார் விசாரணை நடத்தினர். அந்த எண் காஞ்சீபுரம் மாவட்டம் தாமல் பகுதியை சேர்ந்த மாயாண்டி மகன் முருகன் (24) என்பவருடையது என தெரியவந்தது.
இந்த நிலையில் கொலை நடந்த இடத்திற்கு நேற்று முன்தினம் காஞ்சீபுரத்தில் இருந்து முருகன் வந்தார். அந்த பகுதியில் அவர் மணிபர்சை தேடியபோது போலீசார் அவரை அழைத்து விசாரித்தனர். விசாரணையில், மேலஈரால் முருகனை, காஞ்சீபுரம் முருகன் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து காஞ்சீபுரம் முருகனை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அதன் விவரம் வருமாறு:

முகநூல் நட்பு

காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த முருகன் 12-ம் வகுப்பு வரை படித்து விட்டு வாகனங்களுக்கான கூலிங் கண்ணாடி தயாரிக்கும் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவரது முகநூல் பக்கத்திற்கு அமுதா என்ற பெயரில் குறுஞ்செய்தி வந்தது. இதையடுத்து முருகனும், அமுதா என்ற பெயர் கொண்ட முகநூல் பக்கத்தில் குறுச்செய்தி அனுப்ப தொடங்கினார். நாளடைவில் இருவரும் தங்களது செல்போன் எண்ணை பரிமாறி பேச தொடங்கினர்.
காஞ்சீபுரம் முருகன், அமுதா முகநூல் பக்கத்தில் கொடுத்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது பெண் குரல் கேட்டது. எனவே தன்னுடன் ஒரு பெண் பேசுவதாக நினைத்து தினமும் மணிக்கணக்கில் பேச தொடங்கியுள்ளார். பின்னர் இருவரும் தங்களது புகைப்படத்தினை பகிர்ந்து கொண்டனர். அப்போது பெண்ணின் புகைப்படத்தை பார்த்த காஞ்சீபுரம் முருகன் தான் காதலிப்பதாக கூற, இருவரும் பழகி வந்தனர்.

அதிர்ச்சி

இந்த நிலையில் தான் காதலிக்கும் பெண்ணை நேரில் பார்க்க விரும்புவதாக காஞ்சீபுரம் முருகன் கூறியுள்ளார். பின்னர் பிப்ரவரி 14&ந் தேதி காதலர் தினத்தில் மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் சந்திக்க இருவரும் முடிவு செய்தனர். அதன்படி 14&ந்தேதி காஞ்சீபுரத்தில் இருந்து முருகன் தனது காதலியை பார்க்க ஆவலோடு வந்தார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தான் காதலித்தது பெண் அல்ல, அது ஆண் என்று தெரியவந்தது. 2 ஆண்டுகளுக்கு மேலாக மேலஈரால் முருகன் பெண் குரலில் பேசியும், வேறொரு பெண்ணின் புகைப்படத்தை அனுப்பியும் தன்னை ஏமாற்றியது காஞ்சீபுரம் முருகனுக்கு தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் காஞ்சீபுரம் முருகனை, முருகன் சமாதானப்படுத்தினார். பின்னர் முருகன் அங்குள்ள கழிவறை பகுதிக்கு சென்று காஞ்சீபுரம் முருகனை ஓரின சேர்க்கையில் ஈடுபட வைத்துள்ளார். இதை முருகன், காஞ்சீபுரம் முருகனுக்கு தெரியாமல் வீடியோ எடுத்துள்ளார்.

மிரட்டல்

அதன்பின்னர் காஞ்சீபுரம் முருகன் ஊருக்கு சென்றதும் தன்னுடைய செல்போன் எண்ணை மாற்றி விட்டு, புதிய எண் பெற்றார். இதை அறிந்த முருகன், காஞ்சீபுரம் முருகனின் குடும்பத்தினரிடம் பேசி அவரது செல்போன் எண்ணை வாங்கி பேசியுள்ளார். அப்போது தன்னிடம் ஓரின சேர்க்கை வீடியோ உள்ளதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும், மேலும் ஓரின சேர்க்கைக்கு வர வேண்டும், வரவில்லை என்றால் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று கூறி முருகன் மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த காஞ்சீபுரம் முருகன், அந்த வீடியோவை அழித்துவிடும்படி கெஞ்சியுள்ளார். ஆனால் அதற்கு முருகன் மறுத்துள்ளார். மேலும் ரூ.50 ஆயிரம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

கொலை

இதையடுத்து காஞ்சீபுரம் முருகன், எப்படியாவது வீடியோவை அழித்துவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டு, கடந்த 14&ந்தேதி காஞ்சீபுரத்தில் இருந்து எட்டயபுரத்திற்கு வந்தார். காஞ்சீபுரம் முருகன் எதற்காக வருகிறார் என்பதை அறியாத முருகன் எட்டயபுரம் பஸ் நிலையத்திற்கு வந்து காத்திருந்து காஞ்சீபுரத்தில் இருந்து முருகன் வந்ததும் அவரை வரவேற்று அழைத்து சென்றார். இருவரும் கோவில்பட்டியில் உள்ள தியேட்டருக்கு படம் பார்க்க சென்றுள்ளனர். ஆனால் அங்கு தியேட்டர் மூடப்பட்டு இருந்தது.
இதனால் மீண்டும் எட்டயபுரத்திற்கு வந்து மது மற்றும் குளிர்பானம் வாங்கிக்கொண்டு மேலக்கரந்தை மயானம் அருகே காட்டுப்பகுதிக்கு சென்றனர். அங்கு காஞ்சீபுரம் முருகன், முருகனை மயக்கமடைய வைப்பதற்காக தான் கொண்டு வந்த விஷத்தினை குளிர்பானத்தில் கலந்து, மதுவில் ஊற்றி  அவருக்கு கொடுத்துள்ளார். மதுவில் விஷம் கலந்து இருப்பதை அறியாத முருகன் அதை வாங்கி குடித்துள்ளார். அப்போது முருகனுக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. அந்த மயக்கத்திலும் காஞ்சீபுரம் முருகனை ஓரின சேர்க்கைக்கு அழைத்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது முருகன் வாந்தி எடுத்து கீழே விழுந்தார். இதனை பார்த்த காஞ்சீபுரம் முருகன், அருகில் கிடந்த கல்லை எடுத்து முருகனின் தலையில் போட்டு விட்டு ஓடி விட்டார். இதில் முருகன் உயிரிழந்தார்.
மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் தான் ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறி முருகன் வீட்டில் இருந்து அடிக்கடி வெளியே சென்று வருவாராம். செல்போனில் உள்ள செயலி மூலமாக முருகன் தன்னுடைய குரலை பெண் குரலாக மாற்றி காஞ்சீபுரம் முருகனை ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொலை வழக்கில் குற்றவாளியை கண்டுபிடித்த போலீசாரை தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பாராட்டினார்.


Next Story