அலுமினிய கடையின் பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம் திருட்டு
மயிலாடுதுறையில் அலுமினிய கடையின் பூட்டை உடைத்து ரூ.1½லட்சத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் அலுமினிய கடையின் பூட்டை உடைத்து ரூ.1½லட்சத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ரூ.1½ லட்சம் திருட்டு
மயிலாடுதுறை கண்ணாரத் தெருவில் வசித்து வருபவர் பழனிவேல் (வயது55). இவர் அதே பகுதியில் அலுமினிய இன்டீரியர் டெக்கரேஷன் கடை நடத்தி வருகிறார். இந்த கடையின் முதல் மாடியில் பழனிவேல் குடும்பத்துடன் வசித்து வருகிறார். வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று காலை 6 மணியளவில் அவர் கடைக்கு வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து பழனிவேல் மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் மயிலாடுதுறை உதவி போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போது கடையில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் உடைக்கப்பட்டு, கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
கண்காணிப்பு கேமரா
இதை தொடர்ந்து அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் மொபட்டில் வந்த மர்ம நபர் ஒருவர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று திருடி விட்டு மீண்டும் மொபட்டில் அங்கிருந்து தப்பி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.
இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். நகரின் மையப் பகுதியில் நடந்த இந்த திருட்டு சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story