கூட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்த இறைச்சி கடைகள்


கூட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்த இறைச்சி கடைகள்
x
தினத்தந்தி 19 Sept 2021 10:59 PM IST (Updated: 19 Sept 2021 10:59 PM IST)
t-max-icont-min-icon

புரட்டாசி மாதத்தையொட்டி நாகையில் இறைச்சி கடைகள் கூட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்தது. விலையை குறைத்து வியாபாரிகள் விற்பனை செய்தனர்.

நாகப்பட்டினம்:
புரட்டாசி மாதத்தையொட்டி நாகையில் இறைச்சி கடைகள் கூட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்தது. விலையை குறைத்து வியாபாரிகள் விற்பனை செய்தனர்.
வெறிச்சோடிய இறைச்சி கடைகள்
புரட்டாசி மாதம் கடந்த 17&ந்தேதி தொடங்கியது. இந்த மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமானது என்பதால் பெரும்பாலான இந்துக்கள் அசைவம் சாப்பிடுவதை தவிர்ப்பது வழக்கம். இதனால் மீன், இறைச்சி விற்பனை மந்தமாக இருக்கும். மற்ற ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்மார்க்கெட், இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் நேற்று புரட்டாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாகை மாவட்டத்தில் இறைச்சி விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு நடைபெறவில்லை. 
ஞாயிற்றுக்கிழமைகளில் பரபரப்பாக  காணப்படும் இறைச்சி கடைகள், நேற்று யாரும் வாங்க வராததால் அனைத்து கடைகளும்  வெறிச்சோடி கிடந்தது. மீன்கள் விலையும் வீழ்ச்சி அடைந்தது. 
விலையை குறைத்து விற்பனை
நாகையில் பல இடங்களில் இறைச்சி, மீன் கடைகளில் பெரும்பாலானவை திறக்கப்படவில்லை. வழக்கமாக செயல்படும் கடைகளில் 75 சதவீத கடைகள் மட்டுமே திறந்து இருந்தன. ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமாக பெரிய இறைச்சி கடை ஒன்றில் குறைந்தது 5 ஆடுகள் முதல் 20 ஆடுகள் வரை வெட்டப்படும். ஆனால் நேற்று 2, 3 ஆடுகளுக்கு மேல் வெட்டப்பட வில்லை. 
நாகை பப்ளிக் ஆபீஸ் ரோடு, மருந்து கொத்தளதெரு, பாரதி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் குறைவாக இருந்தது. வெட்டப்பட்ட ஆடு, கோழிகளின் இறைச்சியை விற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் வியாபாரிகள் கிலோவுக்கு ரூ.15 முதல் ரூ.25 வரை விலையை குறைத்து விற்பனை செய்தனர். 
 அதேபோல அண்ணா சிலை அருகே உள்ள மீன் மார்க்கெட் பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் புரட்டாசி மாதத்தையொட்டி எதிர்பார்த்த அளவு வியாபாரம் நடக்கவில்லை என வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.

Next Story