திண்டிவனம் அருகே கத்திமுனையில் ரூ.30 லட்சம் பறித்த போலீஸ்காரர் உள்பட 4 பேர் கைது ரூ.9 லட்சம் ரொக்கம்- கார் பறிமுதல்


திண்டிவனம் அருகே கத்திமுனையில் ரூ.30 லட்சம் பறித்த  போலீஸ்காரர் உள்பட 4 பேர் கைது ரூ.9 லட்சம் ரொக்கம்- கார் பறிமுதல்
x
தினத்தந்தி 19 Sep 2021 5:32 PM GMT (Updated: 19 Sep 2021 5:32 PM GMT)

திண்டிவனம் அருகே கத்திமுனையில் ரூ.30 லட்சத்தை பறித்துச் சென்ற வழக்கில் போலீஸ்காரர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.9 லட்சம் ரொக்கம், கார் பறிமுதல் செய்யப்பட்டது.

பிரம்மதேசம், 


ரூ.30 லட்சம் பறிப்பு 

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள சார்வாய்புதூர் பகுதியை சேர்ந்தவர் முகமதுஜின்னா(வயது 37). இவர் அதே பகுதியில் ஊறுகாய் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். இவருடைய கம்பெனியில் அதே ஊரை சேர்ந்த ராஜா மேலாளராகவும்(30), சிபி சக்கரவர்த்தி(28) காசாளராகவும் பணிபுரிந்து வருகிறார்கள். கடந்த 15-ந்தேதி ராஜாவும், சிபிசக்கரவர்த்தியும் ஊறுகாய் கம்பெனிக்கு வெள்ளரிக்காய் விற்பனை செய்த திண்டிவனம், மரக்காணம் பகுதி விவசாயிகளுக்கு வழங்குவற்காக ரூ.30 லட்சத்தை எடுத்துக் கொண்டு காரில் புறப்பட்டனர். காரை சார்வாய்புதூரை சேர்ந்த கிருஷ்ணன்(24) என்பவர் ஓட்டினார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பெருமுக்கல் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, பின்னால் மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் காரை வழிமறித்தது. கார் நின்ற அடுத்த சில நொடிகளில் அந்த கும்பல், கார் கண்ணாடியை அடித்து நொறுக்கியது. பின்னர் அந்த கும்பல் கத்தியை காட்டி மிரட்டி ரூ.30 லட்சத்தை பறித்து விட்டு, அங்கிருந்து தப்பியது. 
பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் குறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. 

4 பேர் அதிரடி கைது

தனிப்படை போலீசார் முதற்கட்டமாக ஊறுகாய் கம்பெனியில் இருந்து பணம் எடுத்துக் கொண்டு வந்தபோது அப்பகுதியில் யார், யாருடைய செல்போன்கள் செயல்பாட்டில் இருந்தது என ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சார்வாய்புதூரை சேர்ந்தவரும், ஊறுகாய் கம்பெனியில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டவருமான பன்னீர்செல்வம்(25), ஊறுகாய் கம்பெனியில் பணிபுரியும் அதேபகுதியை சேர்ந்த மனோஜ்குமார்(27) மற்றும் மணிகண்டன்(20), சென்னை சிட்டி ஆயுதப்படை போலீஸ்காரரான சென்னை புதுப்பேட்டை சாமி தெருவை சேர்ந்த செல்வகுமார்(46) ஆகிய 4 பேரும் அடிக்கடி செல்போனில் பேசியது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் பன்னீர்செல்வம் உள்பட 4 பேரும் ஒரு காரில் சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் வழியில் திண்டிவனத்திற்கு வந்தபோது, போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், கைதான பேரும் கொடுத்த தகவலின் அடிப்படையில் சென்னையை சேர்ந்த கொள்ளை கும்பலை சேர்ந்த 8 பேர்  காரை வழிமறித்து ஊறுகாய் கம்பெனி ஊழியர்களிடம் ரூ.30 லட்சத்தை பறித்தது தெரியவந்தது. இதையடுத்து கைதானவர்களிடம் இருந்த ரூ.9 லட்சம் ரொக்கம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 4 பேரும் செஞ்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள 8 பேரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

விரைவில் பிடிபடுவார்கள் 

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், பன்னீர்செல்வம், மணிகண்டன், மனோஜ்குமார் ஆகியோர் ஊறுகாய் கம்பெனியில் பணிபுரிந்துள்ளனர். செம்மரக்கடத்தல், வாகனங்கள் திருட்டு போன்ற வழக்குகளில் சிக்கியதால் பன்னீர்செல்வத்தை ஊறுகாய் கம்பெனி நிர்வாகம் வேலையில் இருந்து நீக்கியது. அதேபோல் மணிகண்டனும் கம்பெனியில் இருந்து நீக்கப்பட்டார். 
கம்பெனிக்கு வெள்ளரிக்காய் விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு ஊழியர்கள் காரில் பணத்தை எடுத்து வந்து பட்டுவாடா செய்வார்கள். இதை தெரிந்து கொண்ட பன்னீர்செல்வம் உள்ளிட்ட 3 பேரும், நண்பரான ஆயுதப்படை போலீஸ்காரர் செல்வகுமாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த பணத்தை கொள்ளையடிக்க 4 பேரும் முடிவு செய்தனர். இதற்காக செல்வகுமார், 8 கொள்ளையர்களை களம் இறக்க திட்டமிட்டார். அதன்படி 8 பேரும் சேர்ந்து ஊறுகாய் கம்பெனி ஊழியர்களை வழிமறித்து ரூ.30 லட்சத்தை பறித்துச் சென்றது. தற்போது செல்வகுமார் உள்ளிட்ட 4 பேரை கைது செய்துள்ளோம். மேலும் தலைமறைவாக உள்ள 8 பேரை கூடிய விரைவில் கைது செய்து ரூ.21 லட்சத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். 
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் கைதான செல்வகுமார் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டதால் கடந்த 2018-ம் ஆண்டு காவல்துறையில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story