கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 ம் கட்டமாக 510 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் - கலெக்டர் நேரில் ஆய்வு


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 ம் கட்டமாக 510 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் - கலெக்டர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 19 Sep 2021 5:53 PM GMT (Updated: 19 Sep 2021 5:55 PM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2-ம் கட்டமாக 510 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நேற்று நடந்தது. இதை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேரில் ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய பகுதியிலும் என 442 இடங்களிலும், 61 அரசு ஆரம்ப சுகாதார மையங்களிலும், 6 அரசு மருத்துவமனைகளிலும், இ.எஸ்.ஐ. மருத்துவமனை என மொத்தம் 510 மையங்களில் 2-ம் கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நேற்று நடைபெற்றது. வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம், குந்தாரப்பள்ளி கிராமத்தில் மற்றும் குருபரப்பள்ளி ஊராட்சி, சோமநாதபுரம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையங்களை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2-ம் கட்டமாக 510 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி போடாதவர்கள், 2-வது தவணை போட வேண்டியவர்கள் பயனடையும் வகையில் தடுப்பூசி முகாம் நடக்கிறது. இந்த முகாமில் கோவிஷீல்டு 34,100 தடுப்பூசிகள், கோவேக்சின் 15,450 தடுப்பூசிகள் என மொத்தம் 49, 550 தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளது. 

இந்த முகாம்களில் அரசு டாக்டர்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனை செவிலியர்கள், தடுப்பூசி செலுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் பொதுமக்களை மையங்களுக்கு அழைத்து வரும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் விவரங்கள் ஆன்லைனில் பதிவு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 
இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது சுகாதார பணிகள் துணை இயக்குனர் கோவிந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சென்னகிருஷ்ணன், ஹேமலதா, வட்டார மருத்துவ அலுவலர் சரவணன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story