வேப்பனப்பள்ளி அருகே விவசாயி கொலையில் 2 பேர் கைது சொத்தை அபகரிக்க முயன்றதால் கொன்றதாக வாக்குமூலம்
வேப்பனப்பள்ளி அருகே விவசாயி கொலையில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சொத்தை அபகரிக்க முயன்றதால் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி அருகே விவசாயி கொலையில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சொத்தை அபகரிக்க முயன்றதால் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
விவசாயி வெட்டிக்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள சீலேப்பள்ளியை சேர்ந்தவர் சின்ன வெங்கடப்பன் (வயது 71). விவசாயி. நேற்று முன்தினம் காலை இவர் விவசாய நிலத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் வந்த மர்ம நபர்கள் இவரை வழிமறித்து ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்தனர். இந்த கொலை குறித்து வேப்பனப்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது சின்ன வெங்கடப்பனின் மருமகள் ஜமுனாவின் தம்பி கார்த்திக் என்பவர் சொத்தை அபகரிக்க கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்த கொலையை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து கார்த்திக்கை (26) போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-
4 பேரும் பலி
வேப்பனப்பள்ளி சீலேப்பள்ளியை சேர்ந்தவர் சின்ன வெங்கடப்பன். இவரது மகன் முருகேசன். இவர் ஓசூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கொரோனாவில் இறந்து விட்டார். இவரது மனைவி ஜமுனா எனது உடன் பிறந்த அக்கா ஆவார். இந்த நிலையில் ஜமுனா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது 2 மகன்களுடன் மொபட்டில் கிருஷ்ணகிரி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது வாகனம் மோதி எனது அக்கா, அவரது 2 மகன்கள் இறந்து விட்டனர். அடுத்தடுத்து 4 பேரும் இறந்து விட்டனர்.
சின்ன வெங்கடப்பனுக்கு 3 ஏக்கர் நிலம் இருந்தது. அவரது மகன், மருமகள், பேரன்கள் இறந்து விட்டதால் அவரது சொத்துக்கான சட்ட உரிமையை பெற நான் முயன்றேன். இதற்கு சின்ன வெங்கடப்பன் எதிர்ப்பு தெரிவித்து சொத்தை அபகரிக்க முயன்றார். இதனால் நான் எனது கூட்டாளிகளான சூளகிரி பகுதியை சேர்ந்த நாகேஷ், அப்பு, ரவி மற்றும் 15 வயது சிறுவன் ஆகியோருடன் சேர்ந்து சின்ன வெங்கடப்பனை கொலை செய்தேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
3 பேருக்கு வலைவீச்சு
இந்த கொலையில் நாகேசையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மற்ற 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இதற்கிடையே கார்த்திக்கின் அக்கா, 2 மகன்கள் விபத்தில் இறந்த வழக்கிலும் சந்தேகம் எழுந்துள்ள நிலையில், போலீசார் அந்த வழக்கையும் மீண்டும் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story