கரூரில் 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி


கரூரில் 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 19 Sep 2021 6:39 PM GMT (Updated: 19 Sep 2021 6:39 PM GMT)

கரூர் மாவட்டத்தில் 624 இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

கரூர்,
தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் கடந்த 12-ந்தேதி மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் முதற்கட்டமாக நடத்தப்பட்டது. இந்த முகாம்கள் மூலம் 61 ஆயிரத்து 724 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.
கரூர் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோர் 9 லட்சத்து 3 ஆயிரத்து 245 பேர் உள்ளனர். இதில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி மட்டும் செலுத்திக்கொண்டோர் 4 லட்சத்து 90 ஆயிரத்து 693 பேர் ஆவர். 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் 1 லட்சத்து 6 ஆயிரத்து 543 பேர். 4 லட்சத்து 12 ஆயிரத்து 552 பேருக்கு முதல்தவணை தடுப்பூசி செலுத்தவேண்டி உள்ளது. எனவே, இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கும், 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியவர்களுக்கும் நேற்று நடைபெற்ற 2-ம் கட்ட முகாம்களின் மூலம் 1 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
624 இடங்களில் சிறப்பு முகாம்
இதையொட்டி அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 165 இடங்களிலும், கரூர் சட்டமன்ற தொகுதியில் 96 இடங்களிலும், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் 196 இடங்களிலும், குளித்தலை சட்டமன்ற தொகுதியில் 162 இடங்களிலும், 5 நடமாடும் முகாம்கள் என மொத்தம் 624 இடங்களில் 2-ம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் 3,744 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதற்காக தடுப்பூசி டோஸ்களும் வரவழைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் முகாம்களில் தடுப்பூசி போட நேற்று காலை முதலே பொதுமக்கள் வரத்தொடங்கினர். 18 வயதிற்கு மேற்பட்டவர்களின் அடையாள அட்டைகள் சரிபார்த்து, தடுப்பூசி செலுத்தப்பட்டன. பொதுமக்கள் பல்வேறு இடங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது. மேலும், தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் தகவல்களை ஆன்லைனில் பதிவு செய்யும் பணியில் அந்தந்த மையங்களில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். 
வேலாயுதம்பாளையம், தோகைமலை
வேலாயுதம்பாளையம் பகுதியில் 2-ம்கட்ட தடுப்பூசி சிறப்பு முகாம் அரசு மருத்துவமனை, காந்தியார் மண்டபம், விவசாய அலுவலகம், காந்தியார் தொடக்கப்பள்ளி, புகளூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தோட்டக்குறிச்சி, தளவாப்பாளையம், அய்யம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. முகாமில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், கார்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் நீண்டவரிசையில் காத்து நின்று தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
தோகைமலை, கழுகூர், காவல்காரன்பட்டி, சேப்ளாப்பட்டி ஆகிய சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நீண்டவரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதில் மொத்தம் 7 ஆயிரத்து 810 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. 
நொய்யல்
நொய்யல் அரசு ஈ.வே.ரா. பெரியார் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் தலைமையிலான மருத்துவ குழுவினர் தடுப்பூசி போட்டனர். முகாமில் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
அதேபோல் வேட்டமங்கலம் அரசு பள்ளி, சேமங்கி அரசு பள்ளி, குளத்துப்பாளையம் அரசு பள்ளி, குந்தாணிபாளையம் அரசு பள்ளி, குறுக்குச்சாலை அண்ணாநகர் அரசு பள்ளி, தவிட்டுபாளையம் அரசு பள்ளி, காந்தி மண்டபம் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நீண்டவரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
1 லட்சம் பேருக்கு தடுப்பூசி
கடவூர் மற்றும் தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்களை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கடவூர் வேப்பங்குடி ஊராட்சியில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வருமாறு அழைப்பு விடுத்தார். இதேபோல் குளித்தலை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நேரில் பார்வையிட்டார்.
கரூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற முகாம்களில் 1 லட்சத்து 36 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில், முதல் தவணை தடுப்பூசியை 81 ஆயிரத்து 575 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 18 ஆயிரத்து 461 பேரும் செலுத்திக்கொண்டனர். அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து பங்கேற்றனர்.

Next Story