ஆசைக்கு இணங்க மறுத்த இளம்பெண் கத்தியால் குத்திக் கொலை


ஆசைக்கு இணங்க மறுத்த இளம்பெண் கத்தியால் குத்திக் கொலை
x
தினத்தந்தி 19 Sep 2021 6:47 PM GMT (Updated: 19 Sep 2021 6:47 PM GMT)

கள்ளக்குறிச்சியில் ஆசைக்கு இணங்க மறுத்ததால் வடமாநில பெண் கத்தியால் குத்தி கொலை செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்டும் பணி சிறுவங்கூர் சமத்துவபுரம் அருகில் நடந்து வருகிறது. இந்த பணியில் வடமாநில தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டு வருகின்றனர். 
அதன்படி பீகார் மாநிலம் அம்ரித் கிராமத்தை சேர்ந்த பிரிதிவ்பிரானு (வயது 30) மற்றும் இவரது மனைவி மூர்த்திதேவி (25) ஆகியோர் கட்டிட வளாகத்திலேயே தங்கி கூலிவேலை செய்து வந்தனர். இதேபோல் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கேசப்நாயக் என்கிற வீரனுபாஸ்வான் (33) என்பவரும் அங்கு கூலி வேலை செய்து வந்தார். 

ஆசைக்கு இணங்க

இந்த நிலையில் நேற்று காலை 6 மணியளவில் மூர்த்திதேவி அங்கு துணி துவைத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கேசப்நாயக், மூர்த்திதேவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். மேலும் ஆசைக்கு இணங்குமாறு கூறினார். இதற்கு மறுப்பு தெரிவித்த மூர்த்திதேவியை வலுகட்டாயமாக கையை பிடித்து இழுத்தாக கூறப்படுகிறது. இதனால் மூர்த்திதேவி கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அவரது கணவர் பிரிதிவ்பிரானு அங்கு வந்து கேசப்நாயக்கிடம் தட்டிக்கேட்டார். 
இதில் ஆத்திரமடைந்த அவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரிதிவ்பிரானுவை  கையில் குத்தினார். இதனை தொடர்ந்து மூர்த்திதேவியை அங்குள்ள கழிவறைக்கு இழுத்து சென்று உள்பக்கமாக  கதவை பூட்டினார். தொடர்ந்து அவர் மூர்த்திதேவியின் வயிற்றில் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் மூர்த்திதேவி சரிந்து விழுந்து இறந்தார். 
இதனிடைய பிரிதிவ்பிரானு  மற்றும் சக தொழிலாளர்கள் கழிவறை கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்றனர். இதை பார்த்த கேசப்நாயக், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மனைவி கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு பிரிதிவ்பிரானு கதறி அழுதார். 
இது பற்றி தகவல் அறிந்ததும் கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரிதிவ்பிரானுவை மீட்டு  சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 
இதற்கிடையில் மூர்த்திதேவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story