கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத ஜவுளி கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் திறந்த அன்றே அதிகாரிகள் மூடினர்
ஜவுளி கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
விராலிமலை:
விராலிமலையில் இருந்து மதுரை செல்லும் சாலையில் தெப்பக்குளம் அருகே நேற்று புதிதாக பட்ஜெட் மென்ஸ் வியர் ஜவுளி கடை திறக்கப்பட்டது. அங்கு முதல் நாள் சிறப்பு சலுகையாக ரூ.500 மதிப்புள்ள சட்டை ரூ.50-க்கு தருவதாக விளம்பரம் செய்திருந்தனர். இதனையறிந்த சுற்றுவட்டார பொதுமக்கள் முதல்நாளான நேற்று காலை முதலே சலுகை விலையில் ஜவுளிகள் வாங்க கடையின் முன்பு முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் அதிகமாக கூடினர். இதனால் வாடிக்கையாளர்கள் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதனை கண்டுகொள்ளாத கடை உரிமையாளர்கள் வியாபாரத்தில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த விராலிமலை தாசில்தார் சரவணன், வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் கூட்டத்தை அப்புறப்படுத்தி கொரோனா தொற்று பரவாமல் இருக்க தமிழக அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத அந்த தனியார் ஜவுளி கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து கடையை மூடினர். இதுகுறித்து விராலிமலை போலீசார் அன்னவாசலை சேர்ந்த ஜஹாங்கீர் அலி மகன் சபியுல்லா (32) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story