ரூ.3½ லட்சம் வெள்ளிப்பொருட்கள் பறிமுதல்
மூங்கில்துறைப்பட்டில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ.3½ லட்சம் வெள்ளிப்பொருட்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சங்கராபுரம்,
விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அடுத்த மாதம்(அக்டோபர்) 6 மற்றும் 9-ந்தேதிகளில் 2 கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி தேர்தல் பறக்கும்படை அலுவலரும், தனி தாசில்தாருமான ராஜலட்சுமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் அலுவலர்கள் கொண்ட குழுவினர் நேற்று காலை சங்கராபுரம் அருகே மூங்கில்துறைப்பட்டு சர்க்கரை ஆலை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமறித்து சோதனை செய்தபோது, அதில் கொலுசு, காப்பு, சங்கிலி உள்பட 6 கிலோ வெள்ளிப்பொருட்கள் இருந்தன. மேலும் ரூ.57ஆயிரம் ரொக்கமும் இருந்தது. வெள்ளிப்பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.3½லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
பறிமுதல்
இதையடுத்து காரில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில், சங்கராபுரத்தை சேர்ந்த சரவணன் என்பதும், உரிய ஆவணங்கள் இன்றி பணம் மற்றும் வெள்ளிப்பொருட்களை எடுத்து வந்ததும் தெரிந்தது. இதையடுத்து பணம் மற்றும் வெள்ளிப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அதனை சங்கராபுரம் ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜேந்திரனிடம் ஒப்படைத்தனர். அப்போது மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகன்நாதன், இளநிலை உதவியாளர் ஸ்டாலின் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story