நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தா.பழூர்,
நடராஜ பெருமானுக்கு வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் 6 நாட்கள் மட்டும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ஆணி மாதம் வரும் ஆணி திருமஞ்சனம் மற்றும் மார்கழி மாதம் நடைபெறும் ஆருத்ரா தரிசனம் ஆகிய நாட்களில் நடைபெறும் அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இதேபோல் புரட்டாசி மாதம் சதுர்த்தசி அன்று நடராஜருக்கு நடைபெறும் அபிஷேகமும் சிறப்பு வாய்ந்தது. அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், நடராஜர் மற்றும் சிவகாமி அம்மனுக்கு நேற்று மஞ்சள் பொடி, மாப்பொடி, திரவியப் பொடி, வில்வப் பொடி, அருகம்புல் பொடி, பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் நடராஜ பெருமான், சிவகாமி அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. நடராஜப் பெருமான் சிவகாமி தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருமுறைகள், சிவபுராணம், நடராஜப் பத்து முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நடராஜர் வழிபாட்டு குழுவினர் ஏற்பாடு செய்தனர். கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
இதேபோல் ஆண்டிமடத்தில் உள்ள தர்மசம்வர்த்தினி அம்மன் உடனுறை அகத்தீஸ்வரர் கோவிலில் புரட்டாசி சதுர்த்தசியை முன்னிட்டு மேல அகத்தீஸ்வரர், தர்மசம்வர்த்தினி அம்மன், நடராஜர் மற்றும் சிவகாமி அம்மனுக்கு நேற்று பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் நடராஜ பெருமான், சிவகாமி அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. நடராஜப் பெருமான், சிவகாமி தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story