கடையில் செல்போன்கள் திருடிய 3 வாலிபர்கள் சிக்கினர்


கடையில் செல்போன்கள் திருடிய 3 வாலிபர்கள் சிக்கினர்
x
தினத்தந்தி 20 Sept 2021 2:22 AM IST (Updated: 20 Sept 2021 2:22 AM IST)
t-max-icont-min-icon

வாடிக்கையாளர் போல் நடித்து, செல்போன் கடையில் 2 செல்போன்களை திருடி விற்க வந்த போது 3 வாலிபர்கள் போலீசாரிடம் சிக்கினர்.

நாகர்கோவில்:
வாடிக்கையாளர் போல் நடித்து, செல்போன் கடையில் 2 செல்போன்களை திருடி விற்க வந்த போது 3 வாலிபர்கள் போலீசாரிடம் சிக்கினர்.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
செல்போன் கடை
நாகர்கோவில் வட்டவிளை பகுதியை சேர்ந்தவர் சபரீஷ்(வயது 36). இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் இளம்பெண் ஒருவர் வேலை செய்கிறார். 
இந்த நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் அப்பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு இருந்தன. ஆனால் சபரீசின் செல்போன் கடை மட்டும் திறந்திருந்தது. மாலை 4 மணி அளவில் ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அதில் ஒரு வாலிபர் மட்டும் செல்போன் கடைக்குள் சென்று, செல்போன் வாங்குவது போல் பணிப்பெண்ணிடம் பேச்சு கொடுத்தார். மேலும் கடையில் உள்ள செல்போன் அனைத்து மாடல்களையும் காட்டுமாறு கூறினார். 
திருட்டு
அதைத்தொடர்ந்து கடையில் இருந்த விலை உயர்ந்த 2 செல்போன்களை இளம்பெண் காட்டினார். அதை வாங்கி பார்த்து கொண்டு இருந்த வாலிபர், வேறு ஒரு செல்போனை கேட்டார். அதை எடுப்பதற்காக இளம்பெண் திரும்பினார். அப்போது அந்த வாலிபர் விலை உயர்ந்த 2 செல்போன்களை திருடிக்கொண்டு வெளியே ஓடினார். இதனால் திகைத்த இளம்பெண் அந்த வாலிபரை பிடிக்க முயன்றார்.
அதற்குள் செல்போன்களை திருடிய வாலிபர் கடைக்கு வெளியே தயாராக இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி மின்னல் வேகத்தில் சென்று மறைந்தார்.
கண்காணிப்பு கேமரா
இதுபற்றி வடசேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த விசாரணை நடத்தினர். செல்போன் கடையில்  இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். 
மேலும் மற்றொரு கடையில்  இருந்த கண்காணிப்பு கேமராவில் வாலிபர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அதையும் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வாலிபர்களை தேடி வந்தனர்.
3 பேர் சிக்கினர்
 இந்த நிலையில் செல்போன்களை திருடிய வாலிபர்கள் அதை உடனே விற்று பணமாக்க முடிவு செய்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் அலெக்சந்திராபிரஸ் ரோட்டில் உள்ள கடையில் செல்போன்களை விற்க சென்றனர். அப்போது அவர்களின் நண்பர் ஒருவர் அந்த வழியாக வந்தார். அவரையும் அழைத்து கொண்டு ஒரு கடையில் செல்போன்களை விற்க முயன்றனர். 
அப்போது அந்த கடைக்காரருக்கு வாலிபர்களின் நடவடிக்கை மீது சந்தேகம் வந்தது. அவர் சில கேள்விகளை கேட்டார். இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்தால் மாட்டிக்கொள்வோம் என கருதி தப்பி ஓட தொடங்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் 2 வாலிபர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்து விசாரித்தனர். 
அப்போது தான் அந்த 2 செல்போன்களும் மற்றொரு கடையில் திருடப்பட்டது என்பது தெரியவந்தது. உடனே அங்கிருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அந்த வாலிபர்களுக்கு தர்ம&அடி கொடுத்து வடசேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்ததும் அவர்களிடம் 2 பேரையும் ஒப்படைத்தனர். தப்பி ஓடிய மற்றொரு வாலிபரையும் போலீசார் மடக்கி பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 
----------------------------
திருடிய 3 மணி நேரத்தில் பிடிபட்டது எப்படி?
--------------
பரபரப்பு தகவல்கள்
------
நாகர்கோவில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் உள்ள செல்போன் கடையில் மாலை 4 மணி அளவில் செல்போன்களை திருடியவர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பினர். இதுபற்றி புகார் வந்ததும், போலீசார் நகர் முழுவதும் செல்போன் திருடர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் போலீசார் வாகன சோதனை செய்தால் நாம் மாட்டி கொள்வோம் என்று முடிவு செய்த செல்போன் திருடர்கள் அதை விற்று பணமாக்க முடிவு செய்தனர். அதை தொடர்ந்து திருடிய இடத்தின் அருகில் உள்ள அலெக்சந்திரா பிரஸ் ரோட்டுக்கு சென்றனர். அப்போது அந்த வழியாக அவர்களின் நண்பர் ஒருவரும் வந்தார். அவர் துணையுடன் செல்போன்களை விற்பதற்காக ஒரு கடைக்கு சென்றனர். அந்த கடைக்காரர், செல்போன்களை வாங்குவதற்கு முன் அவற்றின் ஐ.எம்.இ.ஐ. எண்களை கேட்டார். அது செல்போனை திருடி வந்தவர்களுக்கு தெரியாது. அவர்கள் தங்கள் விருப்பம் போல் எண்களை கூறினர். இதனால் கடைக்காரருக்கு சந்தேகம் அதிகரித்தது. இதற்கு மேல் இங்கு இருந்தால் நாம் மாட்டி கொள்வோம் என்று 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். இதனால் அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் சந்தேகம் வந்து, தப்பி ஓடியவர்களில் 2 பேரை மடக்கி பிடித்தனர். ஒருவர் தப்பி ஓடி விட்டார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் தப்பி ஓடியவரையும் இரவு 7 மணி அளவில் மடக்கி பிடித்தனர். இதன்மூலம் செல்போன் திருட்டு நடந்த 3 மணி நேரத்தில் 3 பேர் போலீசாரிடம் பிடிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story