சாவு ஊர்வலத்தை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு


சாவு ஊர்வலத்தை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 19 Sep 2021 9:10 PM GMT (Updated: 19 Sep 2021 9:10 PM GMT)

நாகர்கோவிலில் சாவு ஊர்வலத்தை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில்:
நாகர்கோவிலில் சாவு ஊர்வலத்தை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாவு ஊர்வலம்
நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்த 90 வயதுடைய முதியவர் நேற்று மரணம் அடைந்தார். அவரது இறுதி சடங்கில் ஏராளமானோர் திரண்டனர். பின்னர், உடலை ஒழுகினசேரி சுடுகாட்டில் தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அதைதொடர்ந்து முதியவர் உடலை சவப்பெட்டியில் வைத்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஏற்றி ஊர்வலமாக உறவினர்கள் கொண்டு சென்றனர்.
இந்த ஊர்வலத்தில் மேள தாளங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வழிநெடுகிலும் பூக்களை தூவியபடி முதியவர் உடலை எடுத்து வந்தனர். சாவு ஊர்வலமானது கோட்டார் போலீஸ் நிலையம் முன் வந்தபோது திடீரென ஊர்வலத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். கொரோனா விதிமுறைகளை மீறி அதிக நபர்களுடன் வந்ததால், ஊர்வலத்தை போலீசார் தடுத்ததாக தெரிகிறது. மேலும், பேண்டு வாத்திய குழுவினரின் உபகரணங்களையும் போலீசார் பறிமுதல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசாருடன் வாக்குவாதம்
இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் முதியவரின் உடலை கொண்டு வந்த வாகனத்தை நடுரோட்டில் நிறுத்தி விட்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனவே போக்குவரத்து பாதிக்கும் நிலை உருவானது. இதனையடுத்து ஊர்வலமாக வந்தவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மேள தாளங்கள் முழங்காமலும், அதிகளவு கூட்டம் இல்லாமலும் உடலை கொண்டு செல்லும்படி அறிவுரை கூறினர்.
முதலில் போலீசாரின் அறிவுரைகளை அவர்கள் ஏற்கவில்லை. தொடர்ந்து வாக்குவாதத்திலேயே ஈடுபட்டனா¢. ஆனால் சிறிது நேரம் கழித்து சமாதானம் அடைந்தனர். இதை தொடர்ந்து வாத்திய குழுவினரின் உபகரணங்களை போலீசார் ஒப்படைத்தனர். பின்னர் முதியவரின் உடலை எடுத்துக்கொண்டு மேள தாளங்கள் இல்லாமல் அமைதியான முறையில் ஊர்வலம் சென்றது. அதன்பிறகு அங்கு ஏற்பட்டு இருந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.

Next Story