தாம்பரம் அருகே உள்ள 177 ஏக்கர் நிலத்தை வருவாய்த்துறையினரிடம் இருந்து திரும்ப பெற நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு பேட்டி


தாம்பரம் அருகே உள்ள 177 ஏக்கர் நிலத்தை வருவாய்த்துறையினரிடம் இருந்து திரும்ப பெற நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு பேட்டி
x
தினத்தந்தி 20 Sep 2021 12:28 AM GMT (Updated: 20 Sep 2021 12:28 AM GMT)

தாம்பரம் அருகே உள்ள 177 ஏக்கர் நிலத்தை வருவாய்த்துறையினரிடம் இருந்து இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னை,

தமிழகம் முழுவதும் நேற்று 2-வது கட்டமாக ‘மெகா’ தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் கொரோனா தடுப்பூசி போட பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையம் முன்பு நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இந்த தடுப்பூசி மையத்தை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். அப்போது சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, துணை கமிஷனர் டாக்டர் எஸ்.மனிஷ், விஷூமகாஜன், டி.சினேகா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

தடுப்பூசி ஒன்றுதான் கொரோனாவை வெல்லும் பேராயுதம். இதை பேரியக்கமாக நடத்த முதல்-அமைச்சர் எடுத்த சீரிய முடிவால் சென்னையில் இந்த முயற்சி வெற்றிநடை போடுகிறது. சென்னையில் கடந்த வாரம் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம் மூலம் ஒரு லட்சத்து 88 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது சென்னையை பொருத்தவரை 2 லட்சத்து 37 ஆயிரம் கொரோனா தடுப்பூசி கையிருப்பில் உள்ளது.

சென்னையில் கடந்த 4 மாதங்களில் அதிகப்படியான தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முன்மாதிரி மாவட்டமாக சென்னை விளங்கும் வகையில் கொரோனா தடுப்பூசி செயல்பாடுகள் அமைந்துள்ளது.

ஜமின் ஒழிப்பு சட்டத்தின்படி தாம்பரம் பகுதியில் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள 177 ஏக்கர் நிலம் வருவாய்த்துறை வசம் உள்ளது. இந்த இடம் பாப்பாசத்திரம் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமானது.

இதை வருவாய்த்துறையினரிடம் இருந்து திரும்ப பெற்று இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்த விவரங்கள் முதல்-அமைச்சரிடம் தெரிவித்து ஓரிரு நாளில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story