அம்பத்தூரில் 3 வயது ஆண் குழந்தை கடத்தல் - புகார் அளித்த 4 மணி நேரத்தில் நாக்பூரில் மீட்ட போலீசார்


அம்பத்தூரில் 3 வயது ஆண் குழந்தை கடத்தல் - புகார் அளித்த 4 மணி நேரத்தில் நாக்பூரில் மீட்ட போலீசார்
x
தினத்தந்தி 20 Sep 2021 12:31 AM GMT (Updated: 20 Sep 2021 12:31 AM GMT)

சென்னை அம்பத்தூரில் 3 வயது ஆண் குழந்தை கடத்தப்பட்டது. இதுபற்றி புகார் அளித்த 4 மணி நேரத்தில் நாக்பூரில் குழந்தையை போலீசார் மீட்டனர்.

திரு.வி.க. நகர், 

சென்னை அம்பத்தூர் பட்டரவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் மிதிலேஷ் (வயது 23). பீகாரை சேர்ந்தவரான இவருடைய மனைவி மீராதேவி. இவர்களுக்கு விஷ்ணு (5), ஷியாம் (3) என 2 மகன்கள் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர்.

இவர்கள் வசிக்கும் வீட்டின் மாடியில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஷிவ்குமார்(23) மற்றும் மோனு(21) ஆகியோர் வசித்து வருகின்றனர். மிதிலேஷ், தனது மனைவியுடன் வேலைக்கு சென்று விடுவதால் அவர்களின் 2 மகன்களையும் மாடியில் வசிக்கும் ஷிவ்குமாரிடம் ஒப்படைத்து செல்வது வழக்கம். கணவன்-மனைவி இருவரும் வேலை முடிந்து வரும்வரை ஷிவ்குமாரும், மோனும் குழந்தைகள் இருவரையும் கவனித்துக்கொள்வார்கள்.

நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்த மிதிலேஷ், தனது இளைய மகன் ஷியாம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஷிவ்குமார்தான் தம்பிக்கு சாக்லேட் மற்றும் பிஸ்கட் கொடுத்து தூக்கிச்சென்றதாக மூத்த மகன் விஷ்ணு தெரிவித்தான். மிதிலேஷ், அக்கம் பக்கம் முழுவதும் தேடியும் ஷிவ்குமாரையும், குழந்தையையும் காணவில்லை. பின்னர்தான் ஷிவ்குமார், குழந்தையை கடத்திச்சென்றது தெரிந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மிதிலேஷ் அம்பத்தூர், பெரம்பூர் மற்றும் சென்டிரல் ரெயில் நிலையங்களில் சென்று இரவு முழுவதும் தேடியும் ஷிவ்குமாரை காணவில்லை. பின்னர் குழந்தை கடத்தப்பட்டது குறித்து நேற்று காலை அம்பத்தூர் எஸ்டேட் போலீசில் புகார் கொடுத்தார்.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் கூடுதல் கமிஷனர் செந்தில்குமார், இணை கமிஷனர் ராஜேஸ்வரி, துணை கமிஷனர்(பொறுப்பு) தீபாகனிகர் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து கடத்தப்பட்ட குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

உதவி கமிஷனர் கனகராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார், குழந்தையை கடத்திச்சென்ற ஷிவ்குமாரின் செல்போன் சிக்னலை வைத்து ஆராய்ந்ததில் அவர், சென்டிரலில் இருந்து மத்திய பிரதேசத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயிலில் குழந்தையை கடத்திச்செல்வது உறுதியானது. அந்த ரெயில் மராட்டிய மாநிலம் நாக்பூர் அருகே சென்று கொண்டிருப்பதும் தெரிந்தது.

உடனடியாக இதுகுறித்து நாக்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். நாக்பூர் போலீசார், ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகைக்காக உஷார் நிலையில் காத்திருந்தனர். பின்னர் நாக்பூர் ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் வந்ததும், தயாராக இருந்த போலீசார், ரெயில் பெட்டிக்குள் ஏறி கடத்தப்பட்ட குழந்தையுடன் இருந்த ஷிவ்குமாரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

விசாரணையில் தனக்கு குழந்தை இல்லாததால், மிதிலேசின் குழந்தையை கடத்தி வந்ததாக கூறினார். பின்னர் மீட்கப்பட்ட குழந்தை மற்றும் கைதான ஷிவ்குமார் இருவரையும் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை அழைத்து வர அம்பத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையிலான போலீசார், குழந்தையின் தந்தையுடன் விமானத்தில் நாக்பூர் செல்கின்றனர்.

குழந்தை கடத்தப்பட்டதாக புகார் அளித்த 4 மணி நேரத்தில் நாக்பூரில் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story