மாணவமாணவிகள் 7 பேருக்கு கொரோனா
திருப்பூர், வெள்ளகோவிலில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவமாணவிகள் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
வீரபாண்டி
திருப்பூர், வெள்ளகோவிலில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவமாணவிகள் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அரசு மேல்நிலைப்பள்ளி
திருப்பூர் வீரபாண்டி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 1910 மாணவமாணவிகள் படித்து வருகின்றனர். 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பள்ளியில் மொத்தம் 24 வகுப்பறைகள் மட்டுமே உள்ள நிலையில் ஒரு நாளைக்கு வகுப்புக்கு 20 பேர் என்ற அடிப்படையில் மாணவர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.
இதே பள்ளியில் பயிற்சி ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சியும் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் கணினி பயிற்சியில் ஈடுபட்டு வந்த ஒரு ஆசிரியருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட்டது.
4 மாணவர்கள்
பரிசோதனை முடிவில், பிளஸ்2 படிக்கும் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதைத் தொடர்ந்து பள்ளி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் கொரோனா தடுப்பு குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவின் பேரில், பள்ளியில் படிக்கும் மற்ற மாணவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளியில் அனைத்து பகுதியிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பள்ளிக்கு 3 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
வெள்ளகோவில்
இதேபோல் வெள்ளகோவில் அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளியில் கடந்த 14ந்தேதி 12ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனுக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. அதனால் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த பரிசோதனையில் 11ம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகள், ஒரு மாணவனுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் கலெக்டர் உத்தரவின் பேரில் பள்ளிக்கு நேற்று முதல் நாளைபுதன்கிழமை வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. துப்புரவு பணியாளர்களை கொண்டு கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.
Related Tags :
Next Story