தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 20 Sept 2021 9:49 PM IST (Updated: 20 Sept 2021 9:49 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்&அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்&அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:

அடிப்படை வசதிக்கு ஏங்கும் ரேஷன்கடை (படம்)

நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரம் வளர்ந்து வரும் கிராமம் ஆகும். இங்கு ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் மக்கள் நின்று பொருட்கள் வாங்கிச்செல்ல எந்த அடிப்படை வசதியும் இல்லை. வெயில் மற்றும் மழையிலும் நின்று கொண்டு தான் பொருட்கள் வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே, இந்த ரேஷன் கடையில் அடிப்படை வசதிகள் செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
யோகநாதன், கிருஷ்ணாபுரம்.
----------------------------------
பாலத்தை சீரமைக்க வேண்டும்

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் தெற்கு அகஸ்தியர்புரம் மின்சார தகன மேடைக்கு செல்லும் சாலையில் உள்ள பாலம் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே, அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாலத்தை சரி செய்யவேண்டும்.
 பாலசுப்பிரமணியன், விக்கிரமசிங்கபுரம்.
--------------------------------

மருத்துவமனை நுழைவுவாயிலில் பஸ்கள்

நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு உள்ள சாலையில் மகாராஜா நகர் ரவுண்டானாவில் இருந்து நெல்லை சந்திப்பு மற்றும் டவுன் செல்லும் பஸ்கள் மருத்துவமனை நுழைவுவாயில் அருகே நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி விடுகின்றன. இதனால் மருத்துவமனையில் இருந்து வெளியே வரும் நோயாளிகள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். இது மட்டுமின்றி நோயாளிகளை அழைத்து வரும் வாகனங்களும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக்கொள்கின்றன. எனவே, இடநெருக்கடி மற்றும் நோயாளிகளின் வசதிக்காக மருத்துவமனையின் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி இறக்கிவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணிக்கவாசகம், பெருமாள்புரம்.
-------------------------------

வாய்க்கால் தூர்வாரப்படுமா?

நெல்லை ஜவகர் அரசு உயர்நிலைப்பள்ளியின் பின்புறம் வாய்க்கால் ஓடுகிறது. இந்த வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் அதில் குப்பைகள் தேங்கி விடுகின்றன. மேலும், அமலைச்செடிகளும் ஆக்கிரமிக்கின்றன. இதனால் இந்த வாய்க்காலில் இருந்து பாம்பு, தேள் போன்றவை பள்ளிக்குள் வந்து விடுகிறது. எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வாய்க்காலை தூர் வார வேண்டும்.
செய்யது அலி, கரிக்காத்தோப்பு
----------------------------

புகாருக்கு உடனடி தீர்வு;
தெருவிளக்குகள் எரிகிறது

தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் முதலியார்பட்டி காந்திநகர் 3&வது தெருவில் அதிகளவில் மக்கள் வசிக்கிறார்கள். இங்கு கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தெருவிளக்குகள் எரியாமல் இருந்தது. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி இருளில் மூழ்கியது. இதுபற்றி கடந்த 17&ந்தேதி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதை அறிந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து சீரமைத்ததன் விளைவாக தற்போது மின்விளக்குகள் எரிகிறது. புகார் மீது உடனடி நடவடிக்கை எடுத்து சீரமைத்த அதிகாரிகளுக்கும், நடவடிக்கை எடுக்க உதவிய தினத்தந்திக்கும் எனது மனமார்ந்த நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
திருக்குமரன், கடையம்.
-------------------------------
குடிநீர் மோட்டாரை சீரமைக்க கோரிக்கை
ஆலங்குளம் தாலுகா கீழப்பாவூர் பேரூராட்சி 17&வது வார்டில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு மின்மோட்டார் பொருத்தப்பட்டு இருந்தது. தற்போது மின்மோட்டார் பழுதாகி விட்டதால் பொதுமக்கள் போதிய தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். எனவே, குடிநீர் மோட்டாரை சீரமைத்து சீராக தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
மாரிச்செல்வம், கோட்டையூர்.
--------------------------------

மின்மாற்றி செயல்பாட்டுக்கு வர வேண்டும் (படம்)

விளாத்திகுளம் அருகே வேப்பலோடையில் மின்மாற்றி அமைக்கப்பட்டது. அந்த மின்மாற்றி இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. அவ்வாறு செயல்பாட்டுக்கு வரும்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு இணைப்பு கொடுக்க வேண்டும். இதனால் மருத்துவமனையில் மின்பற்றாக்குறை வராமல் சரி செய்யலாம்.
ஜேம்ஸ், வேப்பலோடை.
-----------------------------

பழுதடைந்த மின்கம்பம்

 தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் 14&வது வார்டு ஆற்றங்கரை தெருவில் மின்கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மின்கம்பம் கடந்த 2 ஆண்டுகளாக பழுதடைந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அது ஆபத்தாகவும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும் இருந்து வருகிறது. எனவே, இந்த மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் அமைக்க மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்குமா?
ஜாகீர் உசேன், ஆத்தூர்.

Next Story