உத்தமபாளையம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவியாளர் கைது


உத்தமபாளையம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவியாளர் கைது
x
தினத்தந்தி 20 Sept 2021 10:03 PM IST (Updated: 20 Sept 2021 10:03 PM IST)
t-max-icont-min-icon

உத்தமபாளையம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவியாளர் கைது செய்யப்பட்டார்.

உத்தமபாளையம்:
உத்தமபாளையம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவியாளர் கைது செய்யப்பட்டார்.
ரூ.5 ஆயிரம் லஞ்சம்
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றுபவர் சிஷோர்குமார் (வயது38). இவர் 10 வருட காலம் பணி முடித்ததால், தனது சம்பள உயர்வு, மற்றும் ஊக்க உயர்வுத்தொகை ஆகியவற்றுக்காக உத்தமபாளையத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தில் மனு  கொடுத்தார். 
அப்போது இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட கல்வி அலுவலக உதவியாளர் அருண்குமார் (38) என்பவர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் சிஷோர்குமார் லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை. எனவே அவர் இதுகுறித்து தேனி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.
கைது
அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூ.5 ஆயிரத்தை சிஷோர்குமாரிடம் கொடுத்து அனுப்பினார்கள். இந்த பணத்தை அவர் நேற்று அருண்குமாரிடம் கொடுத்தார். அப்போது அங்கு ஏற்கனவே பதுங்கி இருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு கருப்பையா தலைமையிலான போலீசார் அருண்குமார் லஞ்ச பணத்தை வாங்கும்போது, கையும், களவுமாக பிடித்தனர். இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
மேலும் மதியம் 2.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை தொடர்ந்து 5 மணி நேரம் கல்வித்துறை அலுவலகத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அருண்குமார் தேனி சிறையில் அடைக்கப்பட்டார். போலீசார் சோதனையால் உத்தமபாளையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story