குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு
அம்மாபாளையம் அருகே குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அனுப்பர்பாளையம்
அம்மாபாளையம் அருகே குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குப்பை கொட்ட எதிர்ப்பு
திருப்பூர் மாநகராட்சி 1 மற்றும் 2 வது மண்டலத்தில் சேகரமாகும் குப்பைகள் திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்குட்பட்ட அம்மாபாளையத்தை அடுத்த கானக்காடு பகுதியில் உள்ள பாறைக்குழிகளில் கடந்த சில நாட்களாக கொட்டப்பட்டு வருகிறது. அங்கு குப்பை கொட்டுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும், பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் கூறி குப்பை கொட்டுவதற்கு பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பலகட்டங்களாக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை.
இந்த நிலையில் குப்பை கொட்டுவதை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி அம்மாபாளையம் பகுதி பொதுமக்கள் சார்பில் நேற்று சாலைமறியல் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதனால் நேற்று காலை முதலே அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் கணபதிநகர், கானக்காடு பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திட்டமிட்டபடி சாலைமறியல் போராட்டத்திற்காக திரண்டனர். ஆனால் போலீசார் பொதுமக்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது ஓரிரு நாட்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் தெரிவித்தனர்.
காத்திருப்பு போராட்டம்
ஆனால் இதில் சமரசமடையாத பொதுமக்கள் அங்குள்ள கோவிலில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மீண்டும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள், இந்த பிரச்சினை தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் சென்று மனு வழங்குவது என்று முடிவு செய்தனர். இதன் பின்பு அங்கிருந்து கலைந்து சென்ற அப்பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுத்தனர். முன்னதாக இதே கோரிக்கையை வலியுறுத்தி அம்மாபாளையம் பகுதியில் உள்ள கடைகளை அடைத்து பொதுமக்களுக்கு ஆதரவாக, வணிகர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-----
Related Tags :
Next Story