விழுப்புரத்தில் மழைநீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி


விழுப்புரத்தில் மழைநீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி
x
தினத்தந்தி 20 Sept 2021 11:04 PM IST (Updated: 20 Sept 2021 11:04 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் மழைநீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் தூய்மைப்பணி முகாமை 6 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டு இப்பணி நேற்று தொடங்கப்பட்டது. 

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட கீழ்பெரும்பாக்கம் மின்வாரிய காலனி, தாமரைக்குளம், கே.கே.சாலை, திருச்சி சாலை ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் மற்றும் வாய்க்கால் தூர்வாரும் பணியை மாவட்ட கலெக்டர் டி.மோகன் தொடங்கி வைத்தார். 
அப்போது அவர் கூறியதாவது:

விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வருகிற 25&ந் தேதி வரை கால்வாய் மற்றும் மழைநீர் வடிகால்கள் தூய்மைப்படுத்தும் திட்டப்பணிகள் நடைபெறுகிறது.

 வடகிழக்கு பருவமழையினால் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகும் வாய்ப்பு உள்ளதாலும், மழைநீரால் டெங்கு, மலேரியா நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழ்நிலை உள்ளதாலும் அதை கருத்தில் கொண்டு இப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட 7 வார்டுகளை கொண்டு 1 மண்டலம் வீதமாக பிரித்து மொத்தம் 6 மண்டலங்களில் தூய்மைப்பணிகள் நடைபெறுகிறது. பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்களில் சரிவர செயல்பாட்டில் இல்லாத குடிநீர், தெருவிளக்குகள், சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்காதவாறு மழைநீர் வடிகால் வாய்க்காலை சரிசெய்து தண்ணீர் வெளியேற தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


விழிப்புணர்வு


இத்திட்ட பணியில் தவிர்க்க முடியாத காரணங்களை தவிர அலுவலர்கள், பணியாளர்கள் விடுப்பில் செல்லாமல் பணியை மேற்கொள்வார்கள். மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பில் இருந்தால் பணிக்கு முந்தைய தினமே சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்புதாரர்களுக்கு தெரியப்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றி தூய்மைப்படுத்தி மழைநீர், நீர்நிலைகளுக்கு தடையின்றி செல்வதற்கு பணிகள் மேற்கொள்ளப்படும். 

மேலும் காலியிடங்களில் சேகரமாகியுள்ள திடக்கழிவுகளை உடனே அகற்றப்படும். பணி முடிவடைந்த பகுதிகளில் கொசு மருந்து தெளிக்கப்படுவதோடு அப்பகுதியில் பொதுமக்கள், வணிக நிறுவனங்களுக்கு பொது சுகாதாரம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.


இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, நகர்நல அலுவலர் பாலசுப்பிரமணியன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சிவசேனா, உதவி கோட்ட பொறியாளர் தனராஜன், உதவி பொறியாளர்கள் வசந்த்பிரியா, அனிதா ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story