வாணியம்பாடியில் பேராசிரியர் வீட்டில் 35 பவுன் நகை, ரூ.3 லட்சம் திருட்டு


வாணியம்பாடியில்  பேராசிரியர் வீட்டில் 35 பவுன் நகை, ரூ.3 லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 20 Sept 2021 11:26 PM IST (Updated: 20 Sept 2021 11:26 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடியில் கல்லூரி பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாணியம்பாடி

வாணியம்பாடியில் கல்லூரி பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி பேராசிரியர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் பேராசிரியர் நகர் பகுதியில் வசித்து வருபவர் அப்துல் வஹாப். இசுலாமியா கல்லூரியில் இந்தி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை குடும்பத்துடன் பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். 

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு வாணியம்பாடிக்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது அறைகளில் பொருட்கள் சிதறி கிடந்தது. வீட்டில் இருந்த பிரோக்கள் திறந்து கிடந்தன.

நகை- பணம் திருட்டு

அதில் வைத்திருந்த 35 பவுன் நகைகள், ரூ.3 லட்சம் ரொக்கம், ஒரு மடிக்கணினி ஆகியவற்றை காணவில்லை. வெளியூர் சென்றிருந்த நேரத்தில் மர்ம நபர்கள் நகை, பணத்தை திருடிச்சென்றுள்ளனர். அவற்றின் மதிப்பு சுமார் ரூ.15 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வாணியம்பாடி டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்களை வரவழைத்து அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து  நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story