பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராஜஸ்தான் வாலிபர் பெங்களூருவில் கைது
இந்திய ராணுவத்தின் ரகசிய தகவல்கள் மற்றும் புகைப்படங்களை பாகிஸ்தான் உளவுபிரிவு அதிகாரிகளுக்கு அனுப்பியதுடன், அவர்களுடன் தொடர்பில் இருந்த ராஜஸ்தான் வாலிபர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பெங்களூரு: இந்திய ராணுவத்தின் ரகசிய தகவல்கள் மற்றும் புகைப்படங்களை பாகிஸ்தான் உளவுபிரிவு அதிகாரிகளுக்கு அனுப்பியதுடன், அவர்களுடன் தொடர்பில் இருந்த ராஜஸ்தான் வாலிபர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்திய ராணுவ தகவல்கள்
இந்திய ராணுவம் சம்பந்தப்பட்ட ரகசிய தகவல்களையும், சில புகைப்படங்களையும் பாகிஸ்தான் நாட்டின் உளவுப்பிரிவு (ஐ.எஸ்.ஐ) அதிகாரிகளுக்கு இந்தியாவை சேர்ந்த ஒருவர் அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்து தெற்கு மண்டல ராணுவ உளவுபிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்திருந்தது. அந்த வாலிபா¢ பெங்களூருவில் வசித்து வருவதும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதுபற்றி பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகளுக்கு, ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, இந்திய ராணுவ தகவல்களை பாகிஸ்தான் உளவுபிரிவு அதிகாரிகளுக்கு அனுப்பிய நபரை கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரம் காட்டினார்கள். இதற்காக மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டு இருந்தது.
ராஜஸ்தான் வாலிபர் கைது
இந்த நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் மற்றும் ராணுவ உளவுபிரிவு அதிகாரிகள் கூட்டாக செயல்பட்டு இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒரு வாலிபரை கைது செய்துள்ளனர். அவரிடம் பாகிஸ்தான் உளவுபிரிவு அதிகாரிகளுக்கு புகைப்படங்கள், ரகசிய தகவல்களை அனுப்பியது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜிதேந்தர் சிங் என்பது தெரியவந்தது. அவர், பெங்களூரு காட்டன்பேட்டையில் உள்ள கடையில் துணி வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது.
ராஜஸ்தானில் இருந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெங்களூருவுக்கு ஜிதேந்தர் சிங் வந்திருந்தார். மேலும் அவர், ராணுவ கமாண்டருக்கான உடை அணிந்து கொண்டு, தான் காமாண்டர் எனக்கூறி வந்திருந்தார். அத்துடன் ராஜஸ்தான் மாநில எல்லையில் உள்ள ராணுவ நிலையத்தின் புகைப்படம், ராணுவ வாகனங்கள் பற்றிய வீடியோக்களை பாகிஸ்தான் உளவுபிரிவு அதிகாரிகளுக்கு ஜிதேந்தர் சிங் அனுப்பி வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் உளவுபிரிவு...
எல்லாவற்றுக்கும் மேலாக பாகிஸ்தான் உளவுபிரிவு அதிகாரிகளுடன், ஜிதேந்தர் சிங் தொடர்பில் இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது. அதாவது அந்த நாட்டு அதிகாரிகளுடன், வாட்ஸ்&அப் வீடியோ அழைப்பு மற்றும் ஆடியோ அழைப்பு மூலமாக பேசியதற்கான ஆதாரங்களும், ரகசிய தகவல்களை அனுப்பி வைத்திருந்ததற்கான ஆதாரங்களும் போலீசாருக்கு கிடைத்திருக்கிறது.
முகநூல் மூலமாக பழக்கமான ஒரு பெண் கூறியதால், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாக ஜிதேந்தர் சிங் போலீசாரிடம் கூறி இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
தீவிர விசாரணை
இதுகுறித்து இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் நிருபர்களிடம் கூறுகையில், பாகிஸ்தான் நாட்டு உளவுபிரிவு அதிகாரிகளுக்கு இந்திய ராணுவம் சம்பந்தப்பட்ட தகவல்கள், புகைப்படங்களை அனுப்பி வைத்து தேசதுரோக செயல்களில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜிதேந்தர் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பாகிஸ்தான் உளவு பிரிவு அதிகாரிகளுடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, என்றார்.
கைதான ஜிதேந்தர் சிங், தெற்கு மண்டல ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story