நெல்லை அருகே ஊர் தலைவர்களுடன் உதவி கலெக்டர் ஆலோசனை


நெல்லை அருகே ஊர் தலைவர்களுடன் உதவி கலெக்டர் ஆலோசனை
x
தினத்தந்தி 21 Sept 2021 2:49 AM IST (Updated: 21 Sept 2021 2:49 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே ஊர் தலைவர்களுடன் உதவி கலெக்டர் ஆலோசனையில் ஈடுபட்டார்.

நெல்லை:
நெல்லை அருகே முன்னீர்பள்ளம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து 2 கொலைகள் நடைபெற்றன. எனவே அந்த பகுதிகளில் குற்றச்செயல், முன்விரோத போக்கை தடுக்கும் வகையில் முன்னீர்பள்ளம், தருவை, கீழசெவல், மேலசெவல், கொத்தன்குளம், கோபாலசமுத்திரம், செங்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுடன் நெல்லை மாவட்ட போலீசார் சார்பில், நேற்று சமூக நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் கோபாலசமுத்திரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமை தாங்கினார். சேரன்மாதேவி உதவி கலெக்டர் சிவ கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு, இரு தரப்பைச் சேர்ந்த ஊர் தலைவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், உங்கள் பகுதிகளில் நடக்கும் குற்றச்செயல்களை தடுக்க பொதுமக்களாகிய நீங்கள் ஒத்துழைக்க வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக இருந்து குற்றச்செயல்களை தடுக்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வருங்காலத்தின் மீது அக்கறை கொண்டு அவர்களை முறையாக நல்வழிபடுத்த வேண்டும். சமூகத்தின் ஒற்றுமையை பேணும் வகையில் அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் என்றார். 

இந்த கூட்டத்தில் நெல்லை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன், சேரன்மாதேவி தாசில்தார் பாலசுப்பிரமணியன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Next Story