பெங்களூருவில் திடீர் கனமழை


பெங்களூருவில் திடீர் கனமழை
x
தினத்தந்தி 21 Sept 2021 2:50 AM IST (Updated: 21 Sept 2021 2:50 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் நேற்று திடீரென கனமழை பெய்தது. விதானசவுதா அலுவலகங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.

பெங்களூரு: பெங்களூருவில் நேற்று திடீரென கனமழை பெய்தது. விதானசவுதா அலுவலகங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.

திடீர் கனமழை

பெங்களூருவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் மதிய நேரங்களில் சாலைகளில் வாகன எண்ணிக்கை குறைவாக இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் திடீரென கனமழை பெய்தது. பின்னர் நேற்று காலை வழக்கம்போல வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணிக்கு மேல் வெயிலின் தாக்கம் குறைந்து இதமான சீதோஷ்ண நிலை நிலவியது.

வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. இந்த நிலையில் திடீரென கனமழை பெய்ய ஆரம்பித்தது. மதியம் 2.15 மணியில் இருந்து 3 மணி வரை 45 நிமிடத்திற்கு இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்தது. பெங்களூரு மெஜஸ்டிக், ராஜாஜிநகர், விதான சவுதா, கப்பன் பார்க், அனந்தராவ் சர்க்கிள், காந்திநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது.

அலுவலகங்களுக்குள் புகுந்த தண்ணீர்

இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. பெங்களூரு விதான சவுதா அருகே உள்ள எம்.எஸ். கட்டிடத்தில் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த அரசு அலுவலகங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் வாகன ஓட்டிகள் மெதுவாகவே வாகனத்தை இயக்கினர். சில இடங்களில் மேம்பாலங்களின் கீழ்பகுதி, சுரங்கபாதைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

இதனால் அனந்தராவ் சர்க்கிள், விதான சவுதா, கப்பன் பார்க் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டானது. வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் கனமழை பெய்த போது விதான சவுதாவில் உள்ள மந்திரிகளின் அலுவலகங்கள், அதிகாரிகளின் அலுவலகங்களில் அறைகளிலும் தண்ணீர் புகுந்தது. அறைகளில் புகுந்த தண்ணீரை ஊழியர்கள் வெளியேற்றினர்.

Next Story