வாய்க்காலில் தலைகுப்புற லாரி கவிழ்ந்து விபத்து
சிதம்பரம் அருகே வாய்க்காலில் தலைகுப்புற லாரி கவிழ்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சிதம்பரம்,
பண்ருட்டியில் இருந்து சிதம்பரம் வழியாக காரைக்கால் நோக்கி நேற்று முன்தினம் இரவு லாரி ஒன்று புறப்பட்டு சென்றது. லாரியை சிதம்பரம் அருகே மெய்யாத்தூர் கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் (வயது 26) என்பவர் ஓட்டினார். சிதம்பரம் அடுத்த அம்மாபேட்டையில் உள்ள ஏழுகண் மதகு பாலம் அருகே சென்றபோது, எதிரே வந்த பஸ்சுக்கு வழிவிட அய்யப்பன் முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து தவறி அங்குள்ள பாசன வாய்க்காலில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் அய்யப்பன் பலத்த காயமடைந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையாமருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த தகவலின் பேரில் அண்ணாமலைநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கிய லாரியை பொக்லைன் எந்திரம் மூலம் மீட்டனர். தொடர்ந்து அங்கு ஏற்பட்டுவந்த போக்குவரத்து பாதிப்பை சரிசெய்தனர்.
ஏழுகண் மதகு பாலம் மிகவும் குறுகியதாக இருப்பதால், இங்கு அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருகிறது. இதை தவிர்க்க பாலத்தை விரிவுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story