90 வயது மூதாட்டியை கழுத்தை நெரித்து கொன்ற பேரன்


90 வயது மூதாட்டியை கழுத்தை நெரித்து கொன்ற பேரன்
x
தினத்தந்தி 20 Sep 2021 9:25 PM GMT (Updated: 20 Sep 2021 9:25 PM GMT)

பெரம்பலூர் அருகே 90 வயது மூதாட்டியை கழுத்தை நெரித்து கொலை செய்த பேரன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர்:

இந்த கொடூர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மர்மமான முறையில்...
பெரம்பலூர்-விளாமுத்தூர் ரோடு கேந்திரிய வித்யாலயா பள்ளி அருகே உள்ள ஏ.ஆர்.சி. நகரை சேர்ந்தவர் அய்யாசாமி. இவரது மனைவி பச்சையம்மாள் (வயது 90). இவர்களுக்கு 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி அவரவர் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். அய்யாசாமி கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். தற்போது பச்சையம்மாள் தனது 3&வது மகன் சங்கரின் வீட்டின் முன் பகுதியில் தனியாக வசித்து வந்தார். இதற்கிடையே சங்கர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிய பச்சையம்மாள், நேற்று காலை வெகுநேரமாகியும் எழுந்திருக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம், பக்கத்தினர் நேற்று காலை 7.15 மணியளவில் பச்சையம்மாள் தங்கியிருந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது, கட்டிலில் பச்சையம்மாள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
கழுத்தில் காயங்கள்
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சஞ்சீவ்குமார் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இறந்து கிடந்த பச்சையம்மாளின் கழுத்தில் காயங்கள் இருந்தன. இதனால் அவரை மர்மநபர்கள் யாரேனும் கொலை செய்தார்களா? என்ற சந்தேகத்தின்பேரில் போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கினர்.
இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து ஓடிய நாய் அருகே உள்ள புளியமரத்தின் அடியில் சென்று நின்றுவிட்டது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதையடுத்து பச்சையம்மாளின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை
மேலும், ஏற்கனவே பச்சையம்மாளுக்கும், அவரது மருமகளான சங்கரின் மனைவி தங்கம் குடும்பத்தினருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது விசாரணையில் தெரியவந்ததால், போலீசார் சந்தேகத்தின்பேரில் தங்கம் குடும்பத்தினரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் தங்கத்தின் மகனும், பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டிரைவராக வேலை பார்த்து வருபவருமான கோகுலிடம் (20) போலீசார் விசாரித்தபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இதனால் அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையை மேற்கொண்டனர். அப்போது அவர் தனது பாட்டி பச்சையம்மாளை, தனது நண்பரான விளாமுத்தூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சுப்பிரமணியின் மகன் கலையரசனுடன்(23) சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.
கைது
மேலும் வீட்டில் பச்சையம்மாள் தங்கியிருந்த பகுதியில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மழையில் நனையாமல் இருக்க ஆடுகளை கட்டி வைக்க முயன்றபோது, அதற்கு பச்சையம்மாள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், கர்ப்பிணியான கோகுலின் அக்காளை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தகாத வார்த்தைகளால் பச்சையம்மாள் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் தனது குடும்பத்தினருக்கு தொடர்ந்து இடையூறாக இருப்பதாக கருதி, அவரை தனது நண்பருடன் சேர்ந்து நள்ளிரவில் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக வாக்குமூலத்தில் கோகுல் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.
இதையடுத்து பெரம்பலூர் போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து கோகுல், கலையரசன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே போலீசார் விசாரணை நடத்தியபோது, ஒன்றும் தெரியாததுபோல் பச்சையம்மாளின் உடல் அருகே கோகுல் நின்றுள்ளார். சந்தேகத்தின்பேரில் போலீசார் நடத்திய விசாரணையிலேயே அவர் சிக்கியுள்ளார். மேலும் பச்சையம்மாள் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை சில மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாட்டியை பேரன் தனது நண்பருடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story