புதையல் ஆசையால் வீட்டில் 20 அடி குழி தோண்டிய தம்பதி


புதையல் ஆசையால் வீட்டில் 20 அடி குழி தோண்டிய தம்பதி
x
தினத்தந்தி 21 Sept 2021 3:07 AM IST (Updated: 21 Sept 2021 3:07 AM IST)
t-max-icont-min-icon

சாம்ராஜ்நகர் தாலுகா, அம்மனபுரா கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதி, வீட்டில் புதையல் இருப்பதாக கேரள மந்திரவாதி சொன்னதை நம்பி நடுவீட்டில் 20 அடி குழி தோண்டிய வினோத சம்பவம் நடந்துள்ளது.

கொள்ளேகால்: சாம்ராஜ்நகர் தாலுகா, அம்மனபுரா கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதி, வீட்டில் புதையல் இருப்பதாக கேரள மந்திரவாதி சொன்னதை நம்பி நடுவீட்டில் 20 அடி குழி தோண்டிய வினோத சம்பவம் நடந்துள்ளது.

கேரள மந்திரவாதி 

சாம்ராஜ்நகர் (மாவட்டம்) தாலுகா, அம்மனபுரா கிராமத்தை சேர்ந்தவர் சோமண்ணா. அவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார். அவர்கள் இருவரும் அதீத கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தனர். இந்த நிலையில், அவர்களது வீட்டில் அடிக்கடி பாம்புகள் நடமாட்டம் தென்பட்டது. அதை கண்டு சோமண்ணாவின் மனைவி அச்சமடைந்தார். ஏதாவது தெய்வ குற்றம் காரணமாக பாம்புகள் அவர்களது வீட்டுக்கு வந்திருக்குமோ என்ற அச்சம் அவரது மனதில் ஏற்பட்டது. அதனால் ஒரு கேரள மந்திரவாதியை அணுகி விஷயத்தை தெரிவித்தார். பாம்புகள் அவர்கள் வீட்டுக்கு வருவதற்கான காரணம் பற்றியும் அந்த மந்திரவாதியிடம் கேட்டார்.  

அதற்கு கேரள மந்திரவாதி உங்கள் வீட்டில் புதையல் உள்ளது. அதை அறிந்த நாகராணிகள் அதை காப்பதற்காக உங்கள் வீட்டுக்கு வருகிறார்கள். அதனால், புதையலை எடுப்பதற்கு முன் பூஜைகள் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அதை கேட்ட சோமண்ணா மற்றும் அவர் மனைவி இருவரும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் அடைந்தனர். அதனையடுத்து சோமண்ணா மற்றும் அவரது மனைவி இருவரும் புதையல் மீதுள்ள ஆசை காரணமாக கேரள மந்திரவாதிக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து பூஜைகளை செய்தனர். நாள் முழுவதும் பூஜை நடத்திய கேரள மந்திரவாதி, அதன் பின்னர் வீட்டில் ஒரு இடத்தை குறிப்பிட்டு அங்கே குழி தோண்டி புதையலை எடுத்துக்கொள்ளும்படி தெரிவித்தார்.

புதையல் கிடைக்கும்   

அந்த மந்திரவாதி சொன்ன இடத்தில் குழியை தோண்டிய சோமண்ணா தம்பதியினருக்கு புதையல் எதுவும் கிடைக்கவில்லை. அதனால் மந்திரவாதியை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் மேலும் ஆழமாக குழி தோண்டுமாறு தெரிவித்துள்ளார். அதனையடுத்து அவர்கள் நடுவீட்டில் கிட்டத்தட்ட 20 அடிக்கும் மேல் குழியை தோண்டியும் புதையல் கிடைப்பதற்கான அறிகுறிகள் எதுவுமே தென்படவில்லை. மீண்டும் இதுபற்றி மந்திரவாதியிடம் தெரிவித்தபோது அவர் மேலும் ஆழமாக குழியை தோண்ட சொல்லியிருக்கிறார்.

சோமண்ணா வீட்டுக்கு முன் மண் குவியல் இருந்ததை கவனித்த அக்கம்பக்கத்தினர் விசாரித்தனர். சோமண்ணா சரியாக பதில் சொல்லாததால் அவர்கள் ராமசமுத்திரா போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கே வந்த போலீசார் அவர்கள் வீட்டுக்கு சென்று பார்த்து திகைப்படைந்தனர். நடந்த விஷயங்களை கேட்டறிந்தனர். அதன் பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சோமண்ணா தம்பதியிடம் விசாரணை செய்து வருகிறார்கள். 

Next Story