98 ஆயிரம் பேர் போடவில்லை


98 ஆயிரம் பேர் போடவில்லை
x
தினத்தந்தி 21 Sep 2021 11:39 AM GMT (Updated: 21 Sep 2021 11:39 AM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி 2வது டோஸ் 98 ஆயிரம் பேர் செலுத்தவில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பூர், செப்.
திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி 2வது டோஸ் 98 ஆயிரம் பேர் செலுத்தவில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
கொரோனா தடுப்பூசி 
கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 16ந் தேதியில் இருந்து மாவட்டம் முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதலில் முன்கள பணியாளர்களான டாக்டர்கள் நர்சுகள் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தடுப்பூசி கொண்டுவரப்பட்டது. கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு காரணமாக முதலில் தயக்கம் காட்டிய பொதுமக்கள் பலரும் பின்னர் தடுப்பூசி ஆர்வமாக செலுத்தி சென்றனர். 
நீண்ட வரிசையில் காலை முதலே மதியம் வரை பலரும் காத்து நின்று தடுப்பூசி செலுத்தினர். திருப்பூர் மாவட்டத்தில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இருப்பதால் சென்னையில் இருந்து கூடுதலாக தடுப்பூசி பெறப்பட்டு, திருப்பூர் மாவட்டத்தில் தட்டுப்பாடின்றி தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை திருப்பூர் மாவட்டத்தில் 17 லட்சத்து 48 ஆயிரத்து 939 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. 
98 ஆயிரம் பேர் செலுத்தவில்லை 
மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தடுப்பூசிகள் கணக்கெடுத்து அனுப்பிவைக்கப்பட்டன. இதுபோல் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. இதன் மூலம் லட்சக்கணக்கானவர்கள் ஒரே நாளில் தடுப்பூசிகளும் செலுத்தினார்கள். இதற்கிடையே கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தியவர்களில் பலர் 2வது டோஸ் செலுத்த ஆர்வம் காட்டாமல் இருந்து வருகிறார்கள். 
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:&
திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பலரும் தடுப்பூசி செலுத்த ஒத்துழைப்பு வழங்கினர். இதனால் தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. கொரோனா தடுப்பூசி 2 டோஸ்களையும் அனைவரும் போட வேண்டும். ஆனால் பலர் முதல் டோஸ் செலுத்திவிட்டு 2வது டோஸ் செலுத்தாமல் இருந்து வருகிறார்கள். அவர்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. அதன்படி மாவட்டத்தில் இதுவரை 2வது டோஸ் செலுத்துவதற்கு தகுதியான நாட்கள் வந்தும், இதுவரை 98 ஆயிரம் பேர் 2வது டோஸ் தடுப்பூசி செலுத்தாமல் இருந்து வருகிறார்கள். இதில் கோவிஷீல்டு 2வது டோஸ் செலுத்தாதவர்கள் 84 ஆயிரத்து 500 கோவேக்சின் 2வது டோஸ் செலுத்தாதவர்கள் 13 ஆயிரத்து 500 பேர் அடங்குவர். 2வது டோஸ் செலுத்தாதவர்கள் உடனே செலுத்த வேண்டும். 
இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story