நாகையில், மாபெரும் தூய்மைப் பணி முகாம் - கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்


நாகையில், மாபெரும் தூய்மைப் பணி முகாம் - கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 21 Sept 2021 7:06 PM IST (Updated: 21 Sept 2021 7:06 PM IST)
t-max-icont-min-icon

நாகையில், மாபெரும் தூய்மைப் பணி முகாமை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம்,

நாகையில் மாபெரும் தூய்மைப் பணி முகாம் நேற்று நடைபெற்றது. முகாமை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து நாகை கடற்கரை சாலையில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதையடுத்து வேளாங் கண்ணி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாசனவாய்க்கால் மற்றும் வடிகால்களில் தூய்மைப்பணி முகாமினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து அவர் கூறியதாவது:-

கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால்கள் தூய்மைப்படுத்தும் திட்டத்தின் கீழ் இன்று(நேற்று) முதல் வரும் 25-ந் தேதி (சனிக்கிழமை) வரை மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப்பணி முகாம் நடைபெறும்.

இதை தொடர்ந்து நாகை மாவட்டத்தில் வரும் வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் இடற்பாடுகளை தவிர்த்திட ஏதுவாக ஊரகம் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள அனைத்து பாசன, மழைநீர் வாய்க்கால் மற்றும் வடிகால்களை தூர்வாரி தூய்மைப்படுத்தும் நோக்குடன் இத்திட்டத்தினை செயல்படுத்த பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, மற்றும் குடிநீர்வடிகால் வாரியம் போன்ற துறைகளும் இணைந்து இந்த ஒருவார காலத்திற்குள் அனைத்து ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் பாசனம், மழைநீர் வாய்க்கால் மற்றும் வடிகால்களை தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ள உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது நாகை மாலி எம்.எல்.ஏ., தி.மு.க. மாவட்ட செயலாளர் கவுதமன், நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, வேளாங்கண்ணி பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி உள்பட பலர் உடனிருந்தனர்.

கீழ்வேளூர் ஒன்றியம் வெண்மணி ஊராட்சியில் மாபெரும் தூய்மைப் பணி முகாம் நடைபெற்றது. வெண்மணி ஊராட்சி மைலாங்குடி வடிகால் வாய்க்கால் தூய்மைப்படுத்தப்பட்டு தூர்வாரப்பட்டது. இந்த நிகழச்சியில் ஊராட்சி தலைவர் மகாதேவன், துணை தலைவர் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் ராஜசேகரன் உள்பட கலந்து கொண்டனர். ஆந்தக்குடி ஊராட்சியில், ஆந்தக்குடி - திருப்பஞ்சனம் வடிகால் வாய்க்கால் தூர்வாரி தூய்மைப்படுத்தப்பட்டது. இதில் ஊராட்சி தலைவர் பாலகிருஷ்ணன், ஊராட்சி செயலாளர் செல்லதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர். கொடியலத்தூர் ஊராட்சியில் உள்ள தெற்கு தெரு வடிகால் வாய்க்கால் தூர்வாரி தூய்மைப்படுத்தப்பட்டது. இதில் ஊராட்சி தலைவர் ரேவதி அய்யப்பன், ஊராட்சி செயலாளர் சக்திவேல் உள்பட கலந்து கொண்டனர்.

Next Story