கொடைக்கானலில் ஸ்ட்ராபெர்ரி சாகுபடி


கொடைக்கானலில் ஸ்ட்ராபெர்ரி சாகுபடி
x
தினத்தந்தி 21 Sept 2021 8:03 PM IST (Updated: 21 Sept 2021 8:03 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் தோட்டக்கலை துறை ஆராய்ச்சி நிலையத்தில் சோதனை அடிப்படையில் ஸ்ட்ராபெர்ரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

கொடைக்கானல்:
கொடைக்கானல் தோட்டக்கலை துறை ஆராய்ச்சி நிலையத்தில் சோதனை அடிப்படையில் ஸ்ட்ராபெர்ரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 
காய்கறி, பழங்கள் சாகுபடி 
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானல், சிறந்த சுற்றுலாதலம் மட்டுமின்றி வளம் கொழிக்கும் விவசாய பூமியாகவும் திகழ்கிறது. இங்கு அரியவகை காய்கறிகள், பழங்களும் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. குறிப்பாக ஸ்டார் புரூட், ஆப்பிள் உள்ளிட்ட பழ வகைகளும், மலைப்பூண்டு, கேரட், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகளும் அடங்கும். 
இதற்கிடையே கொடைக்கானல் பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில், பாம்பார்புரம் பகுதியில் அரசின் தோட்டக்கலை துறை ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் விவசாயம் செய்வதற்கு தேவையான நடைமுறைகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
16 வகையான 'ஸ்ட்ராபெர்ரி' 
இந்தநிலையில் தோட்டக்கலை துறை ஆராய்ச்சி நிலையத்தில் தற்போது ஸ்ட்ராபெர்ரி செடிகள் சாகுபடி குறித்தும், அதில் விளையும் பழங்களின் மகசூல் குறித்தும் ஆராய்ச்சி நடந்து வருகிறது. அதன்படி, ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 5 சென்ட் பரப்பளவில் பிளாஸ்டிக் நிழற்கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 
அதில் மராட்டியம், மத்தியபிரதேசம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து செர்யெர்ட்டா, விமரானா, கட்ரைன் ஸ்விட்பெர்ன், பெஸ்புவல் உள்ளிட்ட 16 வகையான ஸ்ட்ராபெர்ரி நாற்று வகைகள் கொண்டுவரப்பட்டு நடவு செய்யப்பட்டுள்ளன. களைகள் முளைக்காத வகையில் நிலத்துக்கு பாலித்தீனால் போர்வை போர்த்தப்பட்டுள்ளது. மேலும் அவற்றிற்கு தேவையான தண்ணீர் பாய்ச்சி, உரம் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் தற்போது 'ஸ்ட்ராபெர்ரி' விளைச்சல் அடைந்துள்ளன. இதுகுறித்து ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் ஒருவர் கூறியதாவது:& 
விவசாயிகளுக்கு லாபம்
ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மலைப்பகுதியில் தான் விளையும். இதனால் கொடைக்கானலில் சோதனை அடிப்படையில், ஸ்ட்ராபெர்ரி பழங்கள் சாகுபடி செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி பல்வேறு மாநிலங்களில் இருந்து 16 வகையான ஸ்ட்ராபெர்ரி நாற்றுகள் கொண்டுவரப்பட்டு கொடைக்கானலில் நடப்பட்டது. தற்போது அவை விளைச்சல் அடைந்துள்ளன. அவற்றில் கூடுதல் மகசூல், சுவை, பழங்களின் அளவு, நோய் பூச்சிக்கு எதிர்ப்பு தன்மை வாய்ந்த ஸ்ட்ராபெர்ரி செடிகள் தேர்வு செய்யப்பட உள்ளது.
இவ்வாறு தேர்வு செய்யப்படும் ஸ்ட்ராபெர்ரி செடிகளை அதிக அளவில் உற்பத்தி செய்து, மலைக்கிராம விவசாயிகளுக்கு வழங்கப்படும். ஸ்ட்ராபெர்ரி செடிகள் நடவு செய்யப்பட்டு 6 மாதங்களில் விளைச்சலுக்கு தயாராகும். அதன்பிறகு வேளாண் தொழில்நுட்பத்துடன் செடிகளை பராமரித்தால் தொடர்ந்து 3 ஆண்டுகள் வரை ஸ்ட்ராபெர்ரி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடலாம். 
ஒரு விவசாயி ரூ.40 ஆயிரம் முதலீடு செய்து ஸ்ட்ராபெர்ரி சாகுபடியில் ஈடுபட்டால், ரூ.1 லட்சம் வரை லாபம் ஈட்டலாம். இந்த பழங்களில் வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்பு சத்துக்கள் அதிகமாக இருப்பதால் சந்தையில் நல்ல வரவேற்பும் உள்ளது. 
இவ்வாறு அவர் கூறினார். 

Next Story