வேடசந்தூர் அருகே அரசு பஸ் டிரைவர் தீக்குளித்து தற்கொலை
வேடசந்தூர் அருகே அரசு பஸ் டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே புளியம்பட்டி, வண்ணான்ஓடை காட்டுப்பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் எரிந்த நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த எரியோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் போலீசார், எரிந்து கிடந்த ஆணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீயில் கருகி இறந்து கிடந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்த விசாரணையில் போலீசார் ஈடுபட்டனர்.
விசாரணையில் அவர், புளியம்பட்டியை சேர்ந்த சிவக்குமார் (வயது 47) என்பது தெரியவந்தது. இவர், கடந்த 2008&ம் ஆண்டு முதல் காஞ்சீபுரம் மாவட்டத்தில் அரசு போக்குவரத்துக்கழகத்தில் தற்காலிக டிரைவராக பணியாற்றி வந்தார். ஆனால் கடந்த 2018&ம் ஆண்டு அரசு பஸ்சை அவர் ஓட்டி சென்றபோது விபத்து ஏற்பட்டது. இதில், அவரது காலில் எழும்பு முறிவு ஏற்பட்டு, பஸ்சை ஓட்ட முடியவில்லை. இதனால் அவர் பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
வேலைக்கு செல்ல முடியவில்லை என்றும், அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணி நிரந்தரம் ஆகவில்லை என்றும் சிவக்குமார் மனஉளைச்சலுடன் காணப்பட்டார். மேலும் அவருக்கு இன்னும் திருமணம் ஆகாததால் மனவேதனை அடைந்தார். இதனால் சிவக்குமார் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி, நேற்று காலை அவர் புளியம்பட்டி அருகே வண்ணான்ஓடை காட்டுப்பகுதிக்கு மண்எண்ணெய் கேனுடன் சென்றார். அங்கு அவர் தனது உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீக்குளித்தார். இதில் பலத்த தீக்காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்துபோனது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து சிவக்குமாரின் தாயார் சரோஜா, வேடசந்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story